< Back
முத்துச்சரம்
சிறுதானிய விழிப்புணர்வை, மக்களிடையே விதைப்பவர்..!
முத்துச்சரம்

சிறுதானிய விழிப்புணர்வை, மக்களிடையே விதைப்பவர்..!

தினத்தந்தி
|
24 Jun 2023 11:51 AM IST

சிறுதானியங்களால் ஈர்க்கப்பட்டு, அதுபற்றிய விழிப்புணர்வுகளை ஆர்வமாக முன்னெடுத்து வருகிறார் ஜெயக்குமார் .

''நம்முடைய இளையதலைமுறையினருக்கு, என்னென்ன சிறுதானியங்கள் இருக்கிறது என்பதே தெரியாதபட்சத்தில் அதன் மகத்துவத்தையும், மருத்துவத்தையும் எப்படி அறிந்திருப்பார்கள்'' என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், ஜெயகுமார். வேலூர் மாவட்டம் குகையநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவரான இவர், சிறுதானியங்களால் ஈர்க்கப்பட்டு, அதுபற்றிய விழிப்புணர்வுகளை ஆர்வமாக முன்னெடுத்து வருகிறார். அந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

* எப்படி ஆரம்பித்தது, சிறுதானிய விழிப்புணர்வு பயணம்?

நான் எம்.ஏ. சோசியாலஜி படித்திருக்கிறேன். சில காலம் இ-பப்ளிஷிங் துறையில் பணியாற்றினேன். அங்கிருந்து மாறி, பல துறைகளில் புதுவிதமான பணிகளில் பணியாற்றி கொண்டிருந்தேன். அப்படி இருக்கையில், 2013-ம் ஆண்டு சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ஒன்று நடந்தது. அதில் நான் தற்செயலாக கலந்து கொண்டேன். அந்த கூட்டத்தில், சிறுதானிய வகைகளை காட்சிப்படுத்தி, ஒவ்வொரு சிறுதானியத்தின் அருமை பெருமைகளை விளக்கினார்கள். அதுவரை எனக்கு தெரிந்த சிறுதானிய வகைகளோடு, தெரியாத பல சிறுதானிய வகைகளை அங்கு தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகுதான், சிறுதானியங்கள் மீதான ஆர்வம் அதிகமானது.

* சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தது எப்போது?

2014-ம் ஆண்டிலிருந்து, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட தொடங்கினேன். அதற்கு முன்பாக, சிறுதானியங்கள் பற்றி நிறைய தேடி படித்தேன். சிறுதானிய வகைகள் பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும், அதற்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்களை பற்றியும் தேடி படித்தேன். ஏனெனில், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்கு முன்பாக, நான் அதுபற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

* எல்லா வீடுகளிலும் சிறுதானியங்கள் பயன்படுத்தப்படும் பட்சத்திலும், விழிப்புணர்வு அவசியமாகிறதா?

நிச்சயமாக. ஏனெனில், நம்முடைய அப்பா-அம்மா தலைமுறையினருக்கு சிறுதானியங்களை பற்றி நன்றாகவே தெரியும். அதை அவர்கள் ரசித்து ருசித்திருப்பார்கள். மாவு வடிவிலோ, லட்டு வடிவிலோ, களி-கஞ்சி போன்ற உணவு வடிவிலோ... அவர்கள் அன்றாடம் சுவைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினரிடம் ஓரிரு சிறுதானிய வகைகளின் பெயர்களை கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கு அதுவே தெரியவில்லை. பிறகு எப்படி, சிறுதானிய வகைகளின் மகத்துவத்தையும், அதில் உருவாகும் உணவு வகைகளையும் அறிந்திருப்பார்கள்.

* சிறுதானிய விழிப்புணர்வை எப்படியெல்லாம் முன்னெடுக்கிறீர்கள்?

2013-ம் ஆண்டு வரை எனக்கும் சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு இருந்ததில்லை. ஆனால் ஒரே ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி, என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றியிருக்கிறது. சிறுதானியங்களோடு பின்னிப் பிணைய வைத்திருக்கிறது. எனக்குள் உண்டான மாற்றத்தை மற்றவர்களுக்கும், ஏற்படுத்தும் முயற்சியாக நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்திருக்கிறோம். சிறுதானிய வகைகளை கொண்டு விழிப்புணர்வு கண்காட்சிகளை நடத்தியிருக்கிறோம். சிறுதானியங்களில் உருவாக்கப்பட்ட புதுமையான உணவு வகைகளை கொண்டு உணவு கண்காட்சிகளையும் ஒருங்கிணைத்திருக்கிறோம். சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் உற்சாகமூட்டும் வகையில், அவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். இப்படியாக, எங்களது விழிப்புணர்வு முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

* சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், சிறுதானிய உணவுகளையும் மக்கள் விரும்புகிறார்களா?

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மக்களை கவர்வதற்காக, நிறைய சிறுதானிய உணவுகளை தயாரித்தோம். குதிரைவாலி, கம்பு மற்றும் பாரம்பரிய அரிசியில் தயாரான கஞ்சி, மூங்கில் அரிசியில் தயாரான சப்பாத்தி மற்றும் பூரி, கம்பு-ராகி-பாரம்பரிய அரிசிகளில் தயாரான தோசை, கருப்பு கவுனி அரிசி உப்புமா, கருப்பு உளுந்து களி, மாப்பிள்ளை சம்பா புட்டு... இந்த உணவு வகைகளை மக்கள் விரும்பி சுவைத்தனர். இவற்றோடு, சிறுதானிய உணவு வகைகளை எளிமையாக சமைத்து சாப்பிடக்கூடிய ரெடிமேட் மிக்ஸ் வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குழந்தைகளுக்கு ஏற்ற சத்துமாவு, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற கஞ்சி மாவு, அடை மிக்ஸ் வகைகளை விரும்பி வாங்கி சென்றனர்.

* சிறுதானியங்கள் மீதான மோகம் அதிகரிக்குமா?

நிச்சயமாக. இன்று பலரது வீடுகளில், அரிசியில் வெண்பொங்கல் சமைப்பதற்கு பதிலாக தினை பொங்கல், குதிரைவாலி பொங்கல் போன்றவையே தயாராகின்றன. மேலும் அரிசி சோறுக்கு மாற்றாக சிறுதானியங்களில் தயாராகும் உணவுகளையும் சாப்பிட பழகி கொண்டிருக்கிறார்கள். இவை மட்டுமின்றி, குதிரைவாலி, கம்பு, பாரம்பரிய அரிசி ஆகியவற்றில் கஞ்சி தயாரித்து சாப்பிடுகிறார்கள். இவை இல்லாதபட்சத்தில், கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் மிக்ஸ் பொருட்களை கொண்டும் உணவு தயாரித்து சுவைக்கிறார்கள்.

* சிறுதானியங்களின் சிறப்பு என்ன?

ராகி, கம்பு, கேழ்வரகு, சாமை, தினை... இப்படி வரிசைக்கட்டி நிற்கும் எல்லா சிறுதானியங்களிலும் பிரத்யேக மருத்துவகுணம் நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து உடலில் தங்கியிருக்கும் கெட்டக்கொழுப்புகளை அகற்றும் பணிகளை இவை செய்கின்றன. உடல் ஆரோக்கியம், உடல் எடை பராமரிப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன. ஒருசில சிறுதானியங்கள், உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன. சிறுதானியங்களின் அவசியத்தை உலகறிய செய்யவே, 2023-ம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளனர்.

* உங்களுடைய ஆசை ?

சிறுதானிய உணவுகளை எல்லோர் வீட்டிலும் சமைத்து சாப்பிட செய்வதுதான் என்னுடைய ஆசை. மேலும் கெடுதல் நிறைந்த துரித உணவுகளுக்கு மாற்றாக சிறுதானிய திண்பண்டங்களை டிரெண்ட் ஆக்குவதுதான், என்னுடைய ஆசை.

மேலும் செய்திகள்