ஜப்பானில் முளைத்து வரும் 'பசுமை நகரங்கள்'..!
|ஜப்பான் நாட்டின் புஜிசாவா என்ற இடத்தில், 19 ஹெக்டர் பரப்பில் மிக பிரமாண்டமான பசுமை நகரம் உருவாகி இருக்கிறது.
பீனிக்ஸ் பறவைக்கு சரியான உதாரணம் ஜப்பான் நாடு. 1945-ல் இரண்டாம் உலகப்போரின் போது நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களில் அணுகுண்டுகள் வீசிய பிறகு, சில ஆண்டுகளிலேயே எப்படி அந்த நாடு உழைப்பால் உயர்ந்ததோ, அதுபோல இப்போதும் பூகம்பம், சுனாமி, அணு உலை வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு அதிலிருந்தும் போராடி மீண்டு வருகிறார்கள்!
கடந்த 20 வருடங்களில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளில் இருந்து பல்வேறு படிப்பினையை கற்றுள்ள அந்நாடு, அதிநவீன பசுமை நகரங்களை நாடு முழுவதும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த பல்வேறு கட்டுமான நிறுவனங்களும், பானாசோனிக் உள்பட எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன. இதன் தொடக்கமாக, ஜப்பான் நாட்டின் புஜிசாவா என்ற இடத்தில், 19 ஹெக்டர் பரப்பில் மிக பிரமாண்டமான பசுமை நகரம் உருவாகி இருக்கிறது.
இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா? நிறையவே இருக்கின்றன. இயற்கையாக கிடைக்கும் எரிபொருளைப் பயன்படுத்தியே இந்த நகரம் இயங்குகிறது என்பதுதான் 'ஹைலைட்'!
உதாரணமாக சூரிய ஒளி, காற்று சக்தி ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரமே இந்நகரில் பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு எக்காரணம் கொண்டும் பசுமை நகருக்குள் நுழைய அனுமதியில்லை. அதேசமயம், இந்த பசுமை நகரில் இயங்கும் எல்லா வாகனங்களும் இயற்கை சக்தியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தில் மட்டுமே இயங்குகின்றன.
வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் சமையல் உள்பட பிற தேவைகளுக்கும் சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஏற்ப எல்லா வீடுகளின் கூரைகளிலும் சோலார் தகடுகள் பொருத்தி உள்ளனர். மொத்தத்தில் பசுமை நகரில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு மிகமிகக் குறைவாகவே இருக்கும். இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாக்கவே இந்த முயற்சி!
முதல் கட்டமாக ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் வகையில் இந்த புதிய பசுமை நகரம் உருவாகி இருக்கிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்குள் இதுபோன்ற பசுமை நகரங்கள், ஜப்பானின் பல பகுதிகளில் தயாராகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகள் கொண்டதாக உருவாகி உள்ள இந்நகரில் மக்கள் குறைந்த வாடகை கொடுத்தும் தங்கலாம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால், இந்த பாணியில் நிறைய பசுமை நகரங்களை ஜப்பானில் பார்க்க முடியும்!
மொத்தத்தில் பசுமை நகரில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு மிகமிகக் குறைவாகவே இருக்கும். இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாக்கவே இந்த முயற்சி!