இனிப்பு தேவையை ஈடுசெய்யும் பழங்கள்
|இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை போக்க உதவும் சில பழ வகைகளின் பட்டியல் இதோ ...
இனிப்பு பலகாரங்கள், ஐஸ்கிரீம், ஜூஸ் போன்ற இனிப்பு சுவை கொண்ட பொருட்களை சாப்பிடாமல் சிலருக்கு அன்றைய நாள் முழுமையடையாது. ஏதாவதொரு வகையில் சர்க்கரையை சேர்த்தே ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக செயற்கை இனிப்புகளை நாடுகிறார்கள். அவை கொண்டு தயாரிக்கப்படும் ஏராளமான உணவு பொருட்கள் பயன் பாட்டுக்கு வந்துவிட்டன. சர்க்கரையின் சுவையை அவை பூர்த்தி செய்கின்றன. ஆனால் அவற்றில் கலோரிகள் அதிகமாக இருக்கும் என்பதால் சில ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும்.
உலக சுகாதார அமைப்பு செயற்கை கலந்த இனிப்புகளை நீண்டகாலமாக பயன்படுத்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் பிற நாட்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பழங்களில் இயற்கையாக கலந்திருக்கும் சர்க்கரையை உட்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இனிப்புகள் அதிகம் சேர்க்கப்படாத உணவுகள், பானங்களை சாப்பிடுமாறும் கூறியுள்ளது. இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை போக்க உதவும் சில பழ வகைகளின் பட்டியல் இது.
மாம்பழம்
இயற்கை சர்க்கரை அதிக அளவு கொண்ட பழம் இது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் சி, ஏ, ஈ, கே உள்பட பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் உள்ளடக்கியது. தினமும் மாலை 5 மணிக்குள் ஒரு மாம்பழம் சாப்பிடுவது நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கவும், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வை கட்டுக்குள் வைத்திருக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.
கொய்யா
கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இந்த பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டது. அதிக நார்ச்சத்தும் உள்ளடங்கியது. பசி உணர்வில் இருந்து நீண்ட நேரம் விலக்கி வைக்கும். இனிப்பை நாடுவதற்கு அனுமதிக்காது.
முலாம்பழம்
முலாம்பழம் லேசான இனிப்பு சுவை கொண்டது. ஆனால் இதில் கலோரிகள் குறைவாகவே இருக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் இந்த பழம் கோடை வெப்பத்தைத் தணிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். இனிப்பு சுவையை நாடுவதையும் கட்டுப்படுத்தும்.
பேரிக்காய்
பேரிக்காய்களை தவறாமல் உட்கொள்வது ரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவும். இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் பேரிக்காய் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடல் எடையையும், கொழுப்பையும் குறைக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் செய்யும்.
பெர்ரி பழங்கள்
புளு பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி ஆகியவை இனிப்பை நாடும்போது உட்கொள்ள வேண்டிய சிறந்த பழங்களாகும். இவை குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்கள் என்பதால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் ஏராளமான இனிப்புகளை வழங்கக்கூடியவை.
தர்பூசணி
இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை போக்க உதவும் சில பழ வகைகளின் பட்டியல் இது.இதில் நிறைய இரும்புச்சத்து மற்றும் டையூரிடிக் பண்புகள் நிறைந்திருக்கின்றன. நீர்ச்சத்தும் நிரம்பப்பெற்றது. இதனை உட்கொண்டால் சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்திவிடும்.