குடைவரை கோவில்களை ஆவணப்படுத்தும் பெண் புகைப்படக்கலைஞர்...
|பள்ளி, கல்லுாரி, திருமணம், குழந்தைகள் என பெண்களின் வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழல ஆரம்பிக்கும் தருவாயில், தன் கனவை நோக்கி அடியெடுத்து அதில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் திலகவதி.
அரக்கோணத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் படித்தது சென்னை. சிறுவயதில் இருந்து போட்டோகிராபி மீது தனி ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று தெரியாமல் இருந்திருக்கிறார். ஆண்டுகள் நகர திருமணம், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கைக்குள் சென்று விட்டார்.
உள்ளத்தில் மட்டுமே தன் போட்டோகிராபி திறமையின் மீதான அபார நம்பிக்கை சுடர் விட்டு எரிந்து கொண்டே இருந்திருக்கிறது. அதற்கு ஸ்மார்ட்போனை சரியான ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார். தன் ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது கூடுதல் ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது.
குடும்பத்தின் ஒத்துழைப்புடன், புகைப்படம் எடுப்பதற்காகவே நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து தன் புகைப்பட வேட்கையை தீர்த்துக் கொண்டிருந்தார். இவரது புகைப்படங்கள் ஒரு கதை சொல்லும் அளவிற்கு ரசிக்கும்படியாய் அனைத்து தரப்பிலும் பாராட்டையும் பெற்றது.
அதன் பின் ஸ்மார்ட்போனில் இருந்து கேமராவிற்கு மாற, முறையாக போட்டோகிராபி வகுப்புகளுக்கு சென்று கற்றார். முதலில் கடினமானதாக இருந்தபோதிலும், தொடர் பயிற்சியும், முயற்சியும் இவரை முறையான புகைப்படக் கலைஞராக மாற்றி இருக்கிறது.
ஆன்லைன் வாயிலாக நடக்கும் புகைப்பட போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் பெற்றுள்ளார். தற்போது புகைப்படத்தின் மீதான காதலால் தமிழகத்தின் குடைவரை கோவில்களை படம் பிடித்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் பயணிக்கிறார். இதுவரை தமிழகத்தில் 92 இடங்களில் சுமார் 110 குடைவரை கோவில்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடைவரை கோவில்களை படம் பிடித்திருக்கிறார். இன்னமும், நிறைய ஊர்களுக்கு பயணிக்க திட்டம் வைத்திருக்கிறார். குடைவரை கோவில்கள் மட்டுமின்றி கோவில் கோபுரங்கள், சிற்பங்களை விதவிதமாக புகைப்படம் எடுத்து அசத்தும் திலகவதியுடன் பேசினோம். அவை இதோ...
''நான் எம்.ஏ. படித்திருக்கிறேன். சிறுவயதில்இருந்தே கட்டிடங்கள், கோவில்கள், சிற்பங்கள் மீது எனக்கு தீராதக்காதல் உண்டு. அவற்றை எனது கனவுகளுடன் சேர்த்து புகைப்படங்களைத் தொகுத்துள்ளேன். வீடுகள், பூக்கள், மரங்கள், சமையல், வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவில்கள்... என சிறிய உலகுக்குள் என் கைபேசி மூலம் சுற்றி சுற்றி புகைப்படங்களை எடுத்தேன். அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன். நண்பர்களிடம் ஓரளவு ஆதரவு கிடைத்தது. அதுவே புகைப்படக் கலை மீதான காதலை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கியது. என் கணவர் ஆறுமுகம் என் பிறந்தநாளுக்கு டி.எஸ்.எல்.ஆர். கேமராவை பரிசளித்தார். அதன் வாயிலாக, இன்னும் சிறப்பாகவே பணி தொடர்கிறது'' என்றவர், குடைவரை கோவில்களைப் படம்பிடிக்கும் ஆர்வத்தை பகிர்ந்து கொண்டார்.
''தமிழர்களின் வரலாற்றை படம்பிடித்து ஆவணப்படுத்தி, புகைப்படத் தொகுப்பு மீதான தீராதக் காதலை கொஞ்சம் தீர்த்துக் கொள்ள நான் எடுத்து வைத்த ஒரு சிறு முயற்சியே இந்த குடைவரை கோவில்கள். தமிழகத்தில் உள்ள குடைவரை கோவில்களைப் பற்றி விவரம் சேகரிக்க தொடங்கினேன். 92 இடங்களில் சுமார் 110 குடைவரை கோவில்கள் அமைந்துள்ளன. அவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலை வடிவம் பெற்றவையாகும். மேலும் மேற்கு வங்கம், அசாம், பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கலைத்திறன் மிக்க இடங்கள் மிகவும் பிடித்தமானவை. பயணம் செய்ய தொடங்கினேன்; படம்பிடிக்கத் தொடங்கினேன். தடைகள் பல கடந்து பயணித்து கொண்டிருக்கிறேன். இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட குடைவரை கோவில்களை படம் பிடித்திருக்கிறேன். முடிந்தவரை அனைத்து குடைவரை கோவில்களையும் படம் பிடித்து தகுந்த தரவுகளுடன் கட்டிடக்கலையை நூலாக்கி, அடுத்தடுத்த தலைமுறைக்கு உயிர் மாறாமல் கடத்த வேண்டும் என்பதே என் தற்போதைய அதிகப்பட்ச ஆசை மற்றும் கனவு என்றும் கூட சொல்லலாம்.
இந்தப் பயணத்தில் எனக்கு கணவர், நண்பர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டவர்கள் உடனிருக்கின்றனர்'' என்றார். இவரது குடைவரை கோவில் புகைப்பட கலெக்ஷனில் பல கோவில்கள் இருந்தாலும், ஒரு கோவிலை மிகவும் ஸ்பெஷலானதாக கூறுகிறார். அதுபற்றி விவரிக்கிறார்.
''ஒரு கல் மண்டபம்' என்று அழைக்கப்படும் திருக்கழுக்குன்றம் குடைவரை கோவில்தான், எனக்கு ரொம்ப ஸ்பெஷல். செங்கல்பட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றம் குன்றில் அமைந்துள்ளது. இது 1,400 ஆண்டுகால தொன்மை வாய்ந்ததாகும். 550-க்கும் மேலான செங்குத்தான படிகளையும் கொண்டது. கி.பி. 610-640 காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய 'குடைக்கூளி' எனும் குடை வரை உள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுகள் இங்கே கிடைத்துள்ளன'' என்பவர், இதுபோலவே இன்னும் ஸ்பெஷலான குடைவரை கோவில்களை தேடி பயணிக்க ஆவலாக இருக்கிறார். தமிழகத்தின் பழங்கால கோவில்களை புகைப்படம் மூலமாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதுதான், திலகவதியின் ஆசை.
''ரசிக்கும் திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மற்றவர்களுக்கு கோவில் கோபுரமாக தெரிவது, எனக்கு கலைநயமான சிற்ப கோபுரமாக தெரிகிறது. கோபுரத்தின் மேலிருந்து கீழ் வரை அதில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களை ரசிப்பது மட்டுமின்றி, அதை நுணுக்கமாக பதிவு செய்கிறேன். தமிழகத்தின் குடைவரை கோவில்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் கலைநயமான கோவில்களையும் ஆவணப்படுத்துகிறேன்''
- திலகவதி.