குழந்தைகளுக்கு அவசியமான சத்துக்கள்
|6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துகளின் பங்களிப்பு அத்தியாவசியமானது. குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக உணவின் அளவை கூட்டுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வைக்க வேண்டும்.
1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பார்லி, மக்காச்சோளம், கம்பு, ஓட்ஸ், அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளில் 2 கப் அளவாவது தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 4 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் 4 கப் சேர்த்துக்கொள்வது நல்லது. இவற்றில் புரதம், கால்சியம், இரும்பு, பி-காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் கேரட், பருப்பு, வெங்காயம், கேப்சிகம், பீட்ரூட் போன்றவற்றிலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
பீன்ஸ், பட்டாணி, மொச்சை, கொண்டைக்கடலை, பயத்தம் பருப்பு போன்ற உலர் தானிய வகைகளிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளில் குழந்தைகள் விரும்பும் சாண்ட்விச், கட்லட் போன்ற பலகாரங்களை தயார் செய்து கொடுக்கலாம். தினமும் குறைந்தபட்சம் ஒரு கப் உலர் தானிய வகைகளை சாப்பிட்டு வருவது நல்லது.
1-3 வயது குழந்தைகள் 2 கப் அளவும், 4-6 வயது குழந்தைகள் 4 கப் அளவும் காய்கறி வகைகளை சாப்பிட வேண்டும். கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், ராகி, பட்டாணி போன்றவற்றை பயன்படுத்தி ரொட்டி, உப்புமா, சூப் வகைகள் தயார் செய்து கொடுக்கலாம். பச்சைக்காய்கறிகளுடன் முட்டை சேர்த்து சாண்ட்விச், காய்கறி புலவ் தயார் செய்து கொடுத்து ருசிக்கவைக்கலாம்.
குழந்தைகள் தினமும் கண்டிப்பாக பழங்கள் சாப்பிட வேண்டும். நான்கைந்து பழ வகைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பவுலில் போட்டு சாப்பிட கொடுக்கலாம். அதனை குழந்தைகள் விரும்பாவிட்டால் ஜூசாகவோ, சாலட்டாகவோ, மில்க் ஷேக்காகவோ தயாரித்து கொடுக்கலாம்.
தினமும் 500 மி.லி பால் பொருட்களை சாப்பிடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அவற்றுள் தரமான புரதம், கொழுப்பு சத்து உள்ளடங்கி இருக்கிறது. பழங்கள், உலர் தானியங்களை விட பால் பொருட்களில் ஊட்டச்சத்து அடர்த்தி அதிகம்.
முட்டை, மீன், இறைச்சி வகைகளை 50 கிராம் அளவாவது அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எந்த உணவு வகைகளையும் அவ்வப்போது தயாரித்து சாப்பிட கொடுக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒருபோதும் சாப்பிட அனுமதிக்கக்கூடாது. அவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும்.