< Back
முத்துச்சரம்
பழங்குடியின மக்களின் நலனில் அக்கறை காட்டுபவர்
முத்துச்சரம்

பழங்குடியின மக்களின் நலனில் அக்கறை காட்டுபவர்

தினத்தந்தி
|
19 Aug 2023 6:43 AM IST

பழங்குடியின மக்கள், ஊருக்குள் வெளியே கூடாரம் அமைத்து விலங்குகளை கொண்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்.

சமூகத்தில் நிறைய ஏற்ற தாழ்வுகள் நிலவுகின்றன. பலவிதமான சமூக அடையாளங்களோடு மனிதர்கள் வாழப் பழகிவிட்டனர். இதை தனி நபராக, யாராலும் மாற்ற இயலாது என்றாலும், உதவி தேவைப்படும் மனிதர்களுக்கு, எல்லோரும் உதவலாம். அந்த கொள்கையின்படி இயங்குகிறார், மேரி குவாக். காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவரான இவர், சமூகத்தில் பின்தங்கிய சிறப்பு மனிதர்களுக்கு பக்கபலமாய் நிற்கிறார்.

''நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே காஞ்சிபுரத்தில் இருக்கும் செல்லம்பட்டிடை கிராமத்தில்தான். அங்கு பள்ளிப்படிப்பை முடித்து, தொலைதூர கல்வி முறையில் கல்லூரி படிப்புகளையும் முடித்தேன். எனக்கு திருமணமாகி, ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஆரம்பத்தில், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் கட்டிட நிறுவனங்களுக்கு இன்டீரியர் மற்றும் ரிப்பேர் மெயிண்டனென்ஸ் வேலைகளை ஒருங்கிணைத்து கொடுப்பதுதான் என்னுடைய அடையாளமாக இருந்தது.

ஆனால், ஒருகட்டத்தில் நம்முடைய சமூகத்தில் இருந்து ஒதுக்குபுறத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள், சாட்டை அடித்து பிழைப்பு நடத்தும் குடும்பங்கள், வயிற்று பிழைப்பிற்காக வித்தை காட்டுபவர்கள்... இவர்களின் நலனில் அக்கறை காட்டத்தொடங்கினேன்'' என்றவர், கடந்த 10 வருடங்களாக காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளை சுற்றியிருக்கும் பழங்குடியின ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

''என்னுடைய கணவரின் உந்துதலால்தான், இன்டீரியர் மற்றும் ரிப்பேர் மெயிண்டனென்ஸ் பணிகளை ஒருங்கிணைக்க தொடங்கினேன். இன்று, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பணிகளை ஒருங்கிணைப்பதோடு, அதில் கிடைக்கும் வருமானத்தின் பெரும் பங்கினை, பழங்குடியின மக்களுக்கு செலவழிக்கிறேன். அவர்கள், அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்கள். இதில் மழை-வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களினால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களது குடும்பமும் வறுமைக்குள்ளாகிறது. அந்த சிந்தனைதான், அவர்கள் பக்கமாக என்னை வழிநடத்தியது.




என்னுடைய தொழில் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொடுக்க ஆரம்பித்தேன். இது இன்றல்ல, நேற்றல்ல... கடந்த 10 வருடங்களாகவே நடக்கிறது. உணவு பொருட்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்ப நலனிலும், அவர்களின் பிள்ளைகளின் கல்வி வாழ்க்கையிலும் பங்கெடுக்கிறேன்'' என்றவர், இந்த சமூக முயற்சிகளை, இதுவரை தனிநபராகவே முன்னெடுத்து வருகிறார். அதை சட்டப்பூர்வமாக மாற்றும் முயற்சிகளிலும் களம் இறங்கி உள்ளார்.

''இதுவரை செய்த நல்ல காரியங்களை, இனி சமூக அமைப்பாக மாற்றி நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதை சட்டப்பூர்வமாக கட்டமைக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், பழங்குடியின மக்களின் நலன்களோடு கூடுதல் பொறுப்புகளையும் சுமக்க ஆசைப்படுகிறேன்.

ஆம்..! இந்தியாவில் தொழுநோய், எய்ட்ஸ் பாதித்தவர்களை பாதுகாக்கவும், அவர்களை பராமரிக்கவும் பிரத்யேக காப்பகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். அன்னை தெராசா போல, நோய் பாதித்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை, வெகுநாட்களாகவே எனக்கு உண்டு. அதை நிஜமாக்க ஆசைப்படுகிறேன்'' என்றவரது சேவையை பாராட்டி, சமீபத்தில் சிறந்த தொழில்முனைவோர் மற்றும் சேவையாளருக்கான விருது வழங்கப்பட்டது. இவரது முயற்சிகளுக்கு இவரது குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளனர்.

மேலும் செய்திகள்