அசத்தலான மினியேச்சர் வீடு..!
|சென்னை நீலாங்கரையை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி மோகன்ராவ், கலை ஆர்வம் உடையவர். தஞ்சாவூர் ஓவியம், எம்ப்ராய்டரி... என பலவிதமான கலை வேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தவரான இவர், 85 வருட பழமையான மினியேச்சர் வீடு ஒன்றையும் பத்திரப்படுத்தி வருகிறார்.
அதுபற்றி அவர், மனம் திறக்கிறார்.
* இந்த மினியேச்சர் வீடு எப்போது உருவானது?
இது 1938-ம் ஆண்டு, என்னுடைய அம்மா உருவாக்கியது. வீட்டிலிருந்த பலா மரக்கட்டையில், 3 வருட உழைப்பிற்குப் பிறகு செட்டிநாடு ஸ்டைலில் இப்படியொரு வீட்டை வடிவமைத்திருக்கிறார். பொம்மை வீடு போலத் தெரிந்தாலும், இதில் வீட்டுக் கட்டுமானத்திற்கான அத்தனை அம்சங்களும், அச்சு பிசங்காமல் இருக்கும்.
* இதன் சிறப்பு என்ன?
இது மூன்று மாடிக் கட்டிட மாதிரியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நம் வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்குமோ அவை அத்தனையும் இந்த மினியேச்சர் வீட்டிற்குள் கொண்டு வந்திருப்பார்கள். என்னுடைய அப்பா தொழிலதிபர் என்பதால், அவரது வெளிநாட்டு பயணங்களின் போதெல்லாம், என் அம்மாவும் உடன் சென்று இந்த மினியேச்சர் வீட்டிற்கான மினியேச்சர் பொருட்களை வாங்கி வந்து அழகு சேர்த்தார். உள்ளூரிலும் என்னுடைய அம்மா நிறைய மினியேச்சர் பொருட்களைத் தேடி வாங்கி, வீட்டை அழகுபடுத்தினார்.
* இந்த மினியேச்சர் வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன?
வீட்டின் வெளிப்புற காட்சியை நினைவூட்டும் கதவு, ஜன்னல், மர தூண்கள் தத்ரூபமாக இருக்கும். வீட்டிற்குள் வரவேற்பறை, சமையல் அறை, படுக்கை அறை... இவற்றில் அந்தந்த அறைகளில் இருக்கக்கூடிய பொருட்கள் இருக்கின்றன. வரவேற்பறையில் சோபா நாற்காலி, டீ மேசை, சமையல் அறையில் சமையல் பொருட்களை வைக்கக்கூடிய பரண்கள், டப்பாக்கள்... என ஒரு வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்குமோ அவை அத்தனையும் இருக்கின்றன.
* தனித்துவமான பொருட்கள் இருக்கிறதா?
ஆம்...! அம்மாவும், அப்பாவும் 70 சதவிகித பொருட்களை வாங்கியே சேர்த்திருக்கிறார்கள். மீதமிருக்கும் 30 சதவிகித பொருட்களை வெள்ளி பொருட்களாகச் செய்து வைத்திருக்கிறார்கள். பலகார தட்டு, அதில் இருக்கும் பலகாரங்கள், பழங்கள், வீட்டிற்குள் இருக்கும் அழகுப்பொருட்கள், பூந்தொட்டிகள், உரல், உலக்கை, போட்டோ பிரேம், பூஜை பொருட்கள், திருமண சுப நிகழ்ச்சியை காட்சிப்படுத்தும் உருவங்கள், டெலிபோன், நாய், நாயைக் கட்டிப்போட உதவும் இரும்பு சங்கிலி, மாடு, மாட்டைக் கட்டிப்போட்டு பால் கறக்கும் பால்காரர், எலி, தேள், பல்லி, கரப்பான்பூச்சி, ஊஞ்சல், பல பருவத்திலான குழந்தைகள் .... என மினியேச்சர் வீட்டை உயிரோட்டமாக வைத்திருக்கும் நிறைய பொருட்கள் இருக்கின்றன. கூடவே, அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுருள் வடிவ இரும்பு படிக்கட்டு மாதிரிகளும், உருவாக்கப்பட்டிருக்கின்றன.
* 85 வருட மினியேச்சர் வீட்டை பராமரிப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
என்னுடைய பெற்றோர், பார்த்துப் பார்த்து உருவாக்கிய வீடு இது. அவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, அதை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நானும் என்னுடைய பங்கிற்கு, நிறையப் பொருட்களை இதில் சேர்த்திருக்கிறேன். என்னைத் தொடர்ந்து என்னுடைய பேரக்குழந்தைகளும் வீட்டை அழகாக்கி வருகிறார்கள். உறவுகளுக்குள் இருக்கும் தொப்புள் கொடி உறவை, இந்த மினியேச்சர் வீடும் கொண்டிருப்பதாக உணர்கிறேன். இந்த பந்தம், மென்மேலும் தொடரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
* இந்த மினியேச்சர் வீட்டை வேறு எப்படி அழகாக்கி இருக்கிறீர்கள்?
இந்த மினியேச்சர் வீட்டை, வண்ண விளக்குகள் ஒளிரவிட்டு, மேலும் அழகாக்கி இருக்கிறோம்.