< Back
முத்துச்சரம்
பெண் கல்வி விழிப்புணர்வில் ஒருசாகச பயணம்
முத்துச்சரம்

பெண் கல்வி விழிப்புணர்வில் ஒரு'சாகச பயணம்'

தினத்தந்தி
|
14 Jun 2023 1:21 PM IST

பெண்கள் கல்வி பெறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இந்தியா முழுக்க காரில் தனியாக பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், உலக சாதனையும் படைத்திருக்கிறார், விஷ்ணு ராம்.

பெண்கள் கல்வி பெறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இந்தியா முழுக்க காரில் தனியாக பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், உலக சாதனையும் படைத்திருக்கிறார், விஷ்ணு ராம்.

கோவையை பூர்வீகமாக கொண்டவரான இவர் இந்தியாவை சுற்றிவரும் நோக்கில் சாலை மார்க்கமாக, 12,200 கிலோமீட்டர் தூரத்தை 256 மணி நேரங்களில் எட்டிப்பிடித்திருக்கிறார்.

விழிப்புணர்வு நிறைந்த சாகச பயணம் குறித்து விஷ்ணு ராம் நம்முடன் பகிர்ந்து கொண்டவை..

* உங்களைப் பற்றி கூறுங்கள்?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூரில் தான். பொறியியல் படித்து இருக்கிறேன். சுயமாக தொழில் செய்து வருகிறேன்.

* சாகச பயணங்களின் மீது ஆர்வம் வந்தது எப்போது? எப்படி?

பொதுவாகவே, உடற்பயிற்சி மீது ஆர்வம் அதிகம். மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டிகள், சைக்கிள் பயணங்கள், கார் பயணங்கள்... இவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். நிறைய மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். வெகுதூர சைக்கிள் பயணங்களையும் முன்னெடுத்து புதுமையான சாதனைகளை படைத்திருக்கிறேன்.

* சமீபத்திய பயணத்திற்கு முன்பு வேறு என்னென்ன சாதனைகள் எல்லாம் செய்திருக்கிறீர்கள்?

ஆம்..! 2021-ம் ஆண்டு, கொரோனா காலகட்டத்தில் நமக்கு உதவிய மருத்துவ ஊழியர்களையும், 'கொரோனா வாரியர்ஸ்' என அழைக்கப்படும் முன்களப் பணியாளர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக கார் பயணம் ஒன்றை முன்னெடுத்தேன். பெங்களூருவில் இருந்து புறப்பட்டு நாக்பூர் சென்று மீண்டும் பெங்களூரு அடைவதுதான் அந்த கார் பயணத்தின் திட்டம். பயண தொலைவான 2,153 கிலோ மீட்டர் தூரத்தை 24 மணி நேரத்திற்குள் எட்டிவிட திட்டமிட்டு இருந்தேன். ஆனால் 20 மணி நேரம் 40 நிமிடங்களிலேயே எட்டி சாதனை படைத்தேன்.

அதைத்தொடர்ந்து, போதை பழக்கத்திற்கு எதிராக 1000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற் கொண்டேன். கோவையில் தொடங்கி ஐதராபாத் வரையிலும் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். மேலும் அன்றாட பயன்பாட்டிற்கு சைக்கிளை பயன்படுத்தி, அதன்மூலம் உடல் பருமன் மற்றும் இதய நோய்களை குறைக்கலாம் என்ற விழிப்புணர்வு கருத்தை முன்னிறுத்தி, மற்றொரு சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை முன்னெடுத்தேன். கோயம்புத்தூரில் இருந்து தொடங்கி சேலம், மதுரை வழியாக கன்னியாகுமரி வரையிலான 623 கிலோமீட்டர் தூரத்தை 23 மணி மணி நேரம் 53 நிமிடங்களில் சைக்கிள் பயணமாக நிறைவு செய்ததுடன், அதையும் பிரத்யேக சாகச பயணமாக பதிவு செய்தேன். அடுத்ததாக, கொரோனா தடுப்பூசி காலகட்டத்தில் அதன் அவசியத்தை வலியுறுத்தி கோவை முதல் திருச்சூர் வரையிலான 100 கிலோமீட்டர் தூரத்தை, மூன்று மணி நேரத்துக்குள்ளாக கடந்தேன். இதன்மூலம் 100 கி.மீ. தூரத்தை, சைக்கிளில் வெகுவிரைவாக தனிநபராக கடந்தவர் என்ற சாதனை பட்டம் கிடைத்தது.

அடுத்ததாக பருவ மாற்றத்தை வலியுறுத்தி, சைக்கிளில் 100 மைல்கள் பயணித்தது, போதைப் பொருட்கள் மற்றும் போதைப் பழக்கத்தை குறைக்க வலியுறுத்தியும் சைக்கிளில் 100 கிலோ மீட்டர் பயணித்தது என நிறைய பயணங்களை முன்னெடுத்து இருக்கிறேன். சைக்கிள் மட்டுமல்ல காரிலும் பல சாகச பயணங்களை விழிப்புணர்வு நோக்கத்துடன் மேற்கொண்டுள்ளேன். அப்படிதான் இந்த பயணமும் அமைந்தது.

* இந்த பயணத்தின் கருப்பொருள் பற்றி விளக்குங்கள்?



இன்றளவும் இந்தியாவின் பல மூலைகளில், பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. அதை மாற்றக்கூடிய விழிப்புணர்வு பயணம் தான் இது. இந்தியாவின் எல்லா கிராமங்களிலும், எல்லா பெண் குழந்தைகளுக்கும் குறைந்தபட்ச கல்வியாவது கிடைக்க வேண்டும் என்பதே இந்த கார் பயணத்தின் நோக்கம். அதை வலியுறுத்தியே இந்தியாவின் நான்கு மூலைகளுக்கும் சென்று வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களை சுற்றி வந்திருக்கிறேன்.

* இந்த பயணம் எங்கு தொடங்கி எங்கு முடிந்தது?

நான் கையில் எடுத்திருந்த விழிப்புணர்வு கருத்தானது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமானது. அதை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்க ஆசைப்பட்டேன். அதற்காக இந்தியாவின் நான்கு திசைகளிலும் இருக்கும் எல்லை பகுதிகளை, சாலை மார்க்கமாக தொடும் முயற்சியோடு சென்னையில் இருந்து கிளம்பினேன். இதற்காக, இந்திய தயாரிப்பான மகேந்திரா எக்ஸ்.யூ.வி.700 காரை, தனி ஆளாக ஓட்டிக்கொண்டு கிளம்பினேன். இந்த பயணத்தில் எனக்கு என பேச்சு துணையோ, வாகன பழுது ஏற்பட்டால் சரிசெய்ய ஏதுவாக மெக்கானிக் துணையோ எதுவும் இல்லை. தனிமையே பயணம் முழுக்க, என்னை ஆட்கொண்டிருந்தது.

* இந்தியாவிற்குள் எங்கெல்லாம் சென்று வந்தீர்கள்?

சென்னையில் இருந்து கிளம்பி, பள்ளம் மேடு நிறைந்த மலை பாங்கான அருணாச்சல பிரதேசத்தின் தேசு (tezu) பகுதியை தொட்டுவிட்டு, அங்கிருந்து உறை பனி தேசமான லே பகுதியில் உலாவிவிட்டு, அங்கிருந்து பாலைவனங்கள் நிறைந்த குஜராத்தின் கோட்டீஸ்வர் பகுதி வழியாக, கன்னியா குமரி வந்தடைந்து அங்கிருந்து சென்னைக்கு திரும்பினேன்.

இந்த நான்கு பகுதிகளையும் இணைக்கும் வழித்தடம் தான் இந்தியாவிலேயே மிகவும் நீளமானது. 12,200 கிலோமீட்டர் தொலைவு உடையது. இப்படியாக நெடுஞ்சாலைகள், பள்ளத்தாக்குகள், பனிப்பொழிவு சாலைகள், பாலைவன சாலைகளில்புயல்-மழை-பேய் காற்று, புழுதி புயல் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களை கடந்து, 256 மணி நேரம் தொடர்ந்து பயணித்தேன்.

* இந்தப் பயணம் விழிப்புணர்வு கருத்தோடு நிறைவடைந்து விட்டதா?

இல்லை. விழிப்புணர்வு பயணம் என்றாலும் இதிலும் ஒரு சாகசத்தை புகுத்தி இருந்தேன். அதாவது, இந்தியாவின் மிக நீளமான மிக தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தை மிகக்குறைந்த நேரத்தில் கடந்திருப்பதால், அது பல உலக சாதனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது. இந்த வழித்தட சாலைகளை இதற்கு முன்பாக 401 மணிநேரத்தில் கடந்ததே சாதனையாக பதிவாகி இருப்பதால், என்னுடைய பயணம் கின்னஸ் சாதனையாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய பயணங்களில் நினைத்த இடத்தில் நிறுத்தி இயற்கை அழகை ரசிக்கவும், புதுப்புது இடங்களில் பொழுதை கழிக்கவும் வாய்ப்பிருக்காது. எல்லாமே திட்டமிட்டபடி தான் நடக்கும். அதை துரத்திக்கொண்டுதான் கார் பயணம் மேற்கொண்டேன். மேலும் இலக்கை மிக குறைந்த காலத்தில் எட்டிப்பிடிக்கும் நோக்கில், தூக்கமின்றி 35 மணிநேரம் தொடர்ச்சியாக கார் ஓட்டினேன்.

* விழிப்புணர்வு சாகச பயணத்தில் கிடைத்த மறக்கமுடியாத அனுபவங்களை கூறுங்கள்?

கொல்கத்தா அருகே இருக்கும் துர்காப்பூர் பகுதியை, அதிகாலையில் கடக்க நேரிட்டபோது நிறைய பெண்கள் சைக்கிளில் பயணமாகிக் கொண்டிருந்தனர். சைக்கிளிங் ஓட்டுகிறார்கள் என்ற பூரிப்பில், அவர்களை இடைமறித்து பேசுகையில், அவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதாக கூறினார்கள். அவர்களில் பெரும்பாலானோர், 18 வயதைகூட நிரம்பாதவர்கள். அவர்களுக்கு படிக்க ஆர்வம் இருந்தும் படிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை, என்பதுடன் அவர்கள் அனைவரும் இளம் வயதிலேயே தாயாகி இருப்பதை கண்டு மனமுடைந்து போனேன்.

அதேபோல லே மலைப்பகுதியில் இருந்து கீழ் இறங்கும்போது, காரின் டாஷ்போர்ட் விளக்குகளும், சென்சார்களும் செயலிழந்துவிட்டன. பிறகு, அதிர்ஷ்டவசமாக கார் சேவை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு 3 மணிநேர காத்திருப்பிற்கு பின் பயணத்தை தொடங்கினேன். மேலும் இந்தியாவின் மிக உயரமான அட்டல் சுரங்கசாலையில் பயணித்ததும், சுகமான அனுபவமாக இருந்தது.

மேலும் செய்திகள்