மனதை மகிழ்ச்சியாக்கும் 'இல்லற பூங்கா'
|சமீபகாலமாக, வீடுகளில் தோட்டம் அமைப்பதும், லேண்ட்ஸ்கேப் வகையிலான இல்லற பூங்கா அமைப்பதும் பிரபலமாகி வருகிறது.
வீட்டில் காலியாக இருக்கும் இடத்தில் பசுமையான புல்தரைகள் அமைத்து, அதில் போன்சாய் மரங்களை வளர்த்து, கொடி வகை செடிகளை படரச் செய்து, வண்ண விளக்குகளை ஒளிர செய்து, குட்டி நீர்வீழ்ச்சிகளை அமைத்து அதில் மீன் வளர்ப்பு, வாத்து வளர்ப்பு என அமர்க்களப்படுத்துகிறார்கள். இயற்கையோடு அதிக நேரம் செலவழிக்க ஆசைப்படுபவர்கள், லேண்ட்ஸ்கேப் தோட்டங்களை ஆர்வத்தோடு அமைக்கிறார்கள்.
ஆனால், இல்லற பூங்கா அமைக்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார், லட்சுமண சாமி.
திருச்சியை சேர்ந்தவரான இவர், பெங்களூருவில் சில காலம் மென்பொருள் துறையில் பணியாற்றியவர். பிறகு போன்சாய் மரங்களால் ஈர்க்கப்பட்டு, போன்சாய் மரம் வளர்ப்பு மற்றும் இல்லற பூங்கா அமைப்பு போன்றவற்றில் ஈடுபட தொடங்கி, இப்போது அதில் எக்ஸ்பெர்ட்டாக திகழ்கிறார்.
இவர், லேண்ட்ஸ்கேப் தோட்டம் அமைக்கும்போது, கவனமாக இருக்கவேண்டிய விஷயங்களை, சொல்கிறார்.
* சரியான இடம்
நாம் தினமும் பார்க்கக்கூடிய, நமது வீட்டின் முன் பகுதி அல்லது பின்பகுதியில் லேண்ட்ஸ்கேப் அமைக்கலாம். சூரிய ஒளி நன்றாக படும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளுக்கு அதிக அளவிலான சூரிய ஒளி தேவைப்படுகிறது.
* வளமான மண்
பூக்கும் மரங்களுக்கு நல்ல வடிகால் வசதி கொண்ட வளமான மண் தேவை. நல்ல மண் இல்லையென்றால், மண் கலவை அல்லது உரத்தில் சேர்த்து மேம்படுத்தலாம்.
* நீா் பாசன அமைப்பு
தோட்டத்திலிருந்து அதிக தூரத்தில் தண்ணீா் குழாய்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் தோட்டம் தவிர மற்ற இடங்களும் ஈரமாகிவிடும். தினம்தோறும் தண்ணீர் ஊற்றுவதும் சிரமமாகிவிடும்.
* நீர்வீழ்ச்சி
உங்கள் வீட்டின் வடக்கு திசையில் நீர்வீழ்ச்சிகளையும் அமைத்துக் கொள்ளலாம். நீர்வீழ்ச்சி அமைக்கும் போது சூரிய ஒளி படாத இடமாக இருந்தால் உயிருள்ள தாவரங்களை அதனுள் வைக்கக் கூடாது. மாறாக, வண்ண மீன்களை அதில் விடலாம்.
* வண்ண மீன்கள்-தாமரைச்செடிகள்
சூரிய ஒளி படக்கூடிய இடத்தில் நீர்வீழ்ச்சி அமைந்தால் உயிருள்ள நீர்வாழ் தாவரங்களை வைக்கலாம். தாவரங்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சிறிய வண்ண மீன்களை அதில் வளர்க்கலாம். தாமரைச்செடிகளை பயன்படுத்திக் கூட வண்ண மீன்களை வளர்க்கலாம். இதன் மூலம் கொசுவை கட்டுப்படுத்த முடியும். அதே சமயத்தில் தாமரை செடிகளையும் வளர்க்க முடியும். தொட்டியின் அளவு குறைந்தது ஒரு அடியாவது இருக்க வேண்டும்.
* புல்வெளிகள்
வெயிலில் வளரும் புல்வகை, மர நிழலில் வளரும் புல்வகை என நிறைய புல் வகைகள் இருக்கின்றன. அதனால் உங்கள் தேவைக்கு ஏற்ப, வீட்டில் அமைக்க இருக்கும் தோட்டத்திற்கு ஏற்ப புல்வகைகளை தேர்ந்தெடுத்து வாங்கி, வளர்க்கலாம். புல்வெளிகளை அமைக்கும் போது நீர் தேக்கங்கள் இல்லாத இடத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. மாதந்தோறும் புல்வெளியை பராமரிப்பது. அவசியம். புல்வெளிகளுக்கு குழாய்களை விட ஸ்பிரிங்க்லர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது நல்லது. புல்வெளிக்கு உகந்த உயரம் 2.5 செ.மீ.
* 'போகஸ்' விளக்குகள்
இரவு நேரங்களில் வெளிச்சமாக இருக்க 'போகஸ்' விளக்குகளை மரங்களின் வேர்ப்பகுதி அல்லது குறிப்பிட்ட செடிகளின் கீழ்ப்புறத்தில் அமைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் தோட்டத்தை அழகாக காட்ட இயலும். சூரிய ஒளியை பயன்படுத்தும் விளக்குகளை உபயோகிக்கலாம். இதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.
* ஊஞ்சல்-சறுக்கல்
குழந்தைகள் மனம் கவரும் வகையிலான ஊஞ்சல் அல்லது சறுக்கல்களை வீட்டு தோட்டத்தில் அமைக்கலாம். குழந்தைகள் ஊஞ்சலில் இருந்து குதித்து ஓடுவதற்கு போதுமான இடவசதி இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
* கூடாரம்
வீட்டு தோட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து மாலை நேரத்தில் காபி அருந்தும் வகையில் காபி மேசைகள், பெஞ்சுகளை மார்பிள் கற்களை வைத்து அமைக்க முடியும். இதன்மூலம் மழைக் காலங்களில் அல்லது வெயில் காலங்களில் மேசைகள் சேதமாகுவதை தடுக்கலாம்.
* பறவை வளர்க்கலாம்
லவ் பேர்ட்ஸ், காக்டைல்.... போன்ற பறவைகளை அதற்கு தேவையான வசதிகளை அமைத்தும் வளர்க்கலாம். பறவைகளை வளர்க்க முடியாதவர்கள் பறவைகளின் சிலைகள், மான் சிலைகள், வாத்து சிலைகள் வைத்துக் கொள்ளலாம். மான் உருவத்தில் உள்ள செடிகளையோ அல்லது பறவைகளின் உருவத்தில் உள்ள செடிகளையோ கூட பயன்படுத்தலாம்.
* புத்தர் சிலைகள்
மனதிற்கு அமைதியை தரும் புத்தர் சிலைகளை வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி அமைத்தால் நல்லது. வெயில் மழை காலங்களில் பழுதடையாமல் இருக்க மார்பிள் புத்தர் சிலைகளை பயன்படுத்தலாம்.
* தகுந்த தாவரங்கள்
தாவரங்களை நன்றாக பராமரித்து வளர்த்து வந்தாலும், அவற்றில் ஒரு சில செடிகள் காய்ந்து போவதுண்டு. நம்முடைய இடத்தில் வெயில் படும் இடத்திற்கு ஏற்பவும் இடத்தின் அளவை பொறுத்தும் மலர் மரங்களையோ, மலர் செடிகளையோ தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அதிக நாள் உயிர் வாழக்கூடிய செடிகளை, மரங்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
* செடிகளுக்கு தேவையான இடைவெளி இருக்க வேண்டும்.
* எளிதில் பராமரிக்க கூடிய செடிகளாகவும் இருக்க வேண்டும்.
* கோடை காலம், மழைக்காலத்தில் அந்தந்த காலநிலைக்கு ஈடு கொடுத்து வாழக்கூடிய செடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அழகாக உள்ளது என்பதற்காக அதிகமான செடிகளை வைக்கக் கூடாது.
* செடிகளை தினமும் பராமரிக்க வேண்டும். உரமூட்டி வளர்க்க வேண்டும்.
* நறுமணம் உள்ள மலர்களையோ அல்லது காய்கறி தோட்டத்தையோ கூட அமைத்துக் கொள்ளலாம்.
* நவீன காலத்தில் எளிமையான கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களை பயன்படுத்தி இயற்கையை ரசிப்பதற்கான பூங்காக்களை ஆரம்பிப்பதற்கு முன்பே திட்டமிட முடியும்.