பசுமையான, பசுந்தீவன 'ஸ்டார்ட்-அப்'..! வழிகாட்டும் இளைஞர்
|இன்றைய இளைஞர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பதை விட, புதுமையான தொழில் தொடங்கி தொழில்முனைவோராக மாறவே ஆசைப்படுகிறார்கள். அந்தவகையில், ஒவ்வொரு இளைஞருக்கும், ஒரு பிரத்யேக தொழில் கனவு இருக்கும். அப்படிதான், ஈரோட்டை சேர்ந்த வீரன் என்ற இளைஞருக்கும் ஒரு தொழில் கனவு இருந்தது. அதுவும் விவசாயிகளுக்கும், கால்நடை பண்ணை வைத்திருப்பவர்களுக்கும் ஏற்றதாக, தன்னுடைய ஸ்டார்ட்-அப் கனவை கட்டமைத்திருக்கிறார்.
ஆம்...! வெளிநாடுகளிலும், வட மாநிலங்களிலும் பிரபலமான 'சைலேஜ்' தீவன தயாரிப்பை, ஒரு தனி இளைஞராக முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, பல கிராமப்புற இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து, அவர்களுக்கு ஸ்டார்ட் அப் வழிகாட்டியாக மாறியிருக்கிறார். இதுபற்றி, வீரன் பகிர்ந்து கொண்டவை இதோ...
உங்களை பற்றி கூறுங்கள்?
நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். பி.காம் படித்திருக்கிறேன். ஆரம்பத்தில் தனியார் வங்கியில் வேலை பார்த்தபடி, விவசாய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தினேன்.
வங்கியில் பணியாற்றினாலும், என்னுடைய சேமிப்பு பணத்தில் 2 ஆடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். அது 2 வருடங்களில், 80 ஆடுகளாக பெருகி நின்றது. ஆட்டு மந்தை பெருக, பெருக அதற்கான தீவன தயாரிப்பில் சிரமம் ஏற்படவே, வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் 'சைலேஜ்' பற்றி தெரிந்து கொண்டேன். அதை முயன்றும் பார்த்தேன்.
அது என்ன 'சைலேஜ்'?
சைலேஜ் என்பது பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம். ஆடு-மாடு பண்ணை வைத்திருப்பவர்களுக்கு, தினமும் அதிக அளவிலான தீவனம் தேவைப்படும். குறிப்பாக ஆடு-மாடுகளின் மொத்த உடல் எடை விகிதத்தில், 8 சதவிகிதத்திற்கு பசும்புல் தீவனம் போடவேண்டும். கொஞ்சம் உலர் தீவனமும் தேவைப்படும். இதற்காகவே சில விவசாயிகள், தங்களுடைய விளைநிலங்களில் பசும்புல் வளர்ப்பார்கள். சிலர் காய்ந்த வைக்கோல்களை வாங்கி தீவனமாக கொடுப்பதுண்டு. இவை இரண்டும் கிடைக்காத நேரங்களில், தீவனமாக பயன்படுவதுதான், சைலேஜ்.
சைலேஜ் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?
யூ-டியூப் மூலமாகத்தான், தெரிந்து கொண்டேன். வெளிநாடுகளில், பண்ணை தொழிலில், சைலேஜ் தீவனத்தின் பங்கு அளப்பரியது. அங்கு, விதவிதமான தானியங்கள், பசும்புல் ரகங்களில் சைலேஜ் தீவனத்தை தயாரிக்கிறார்கள். அதை யூ-டியூப் வாயிலாக பார்த்து, தெரிந்து கொண்டதுடன், என்னுடைய பண்ணைக்கு தேவையான தீவனங்களை தயாரிக்க முயன்றேன்.
சைலேஜ் எப்படி தயாராகிறது?
பல்வேறு பொருட்களில் பசுந்தீவனம் தயாரிக்கப்பட்டாலும், மக்காச்சோளத்தில் தயாரிக்கப்படும் சைலேஜ்தான் சமச்சீரான தீவனமாக அறியப்படுகிறது. இது ஆடு-மாடுகளின் வளர்ச்சியில், ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து கொண்டு, அதை முயன்று பார்க்க தொடங்கினேன்.
மக்காச்சோளம் (80 முதல் 90 நாள் வளர்ந்தது), சோள பயிர், கம்பு நேப்பியர்... போன்றவற்றை 5 மி.மீ முதல் 8 மி.மீ அளவில் அரைத்து அல்லது நறுக்கி, நொதித்தல் முறையில் பதப்படுத்தி, பக்குவமாய் பேக்கிங் செய்ய வேண்டும். இப்படி பக்குவமாய் பதப்படுத்தும் பசுந்தீவனம், ஒரு வருடம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். அதேசமயம் ஆடு, மாடு, கோழி, குதிரை... போன்றவற்றுக்கு விருப்பமான உணவாகவும், ஊட்டச்சத்து மிகுந்த உணவாகவும் மாறுவதோடு, செரிமான சக்தியையும் அதிகமாக்கும்.
உங்களுடைய ஸ்டார்ட்-அப் முயற்சி வெற்றி பெற்றதா?
விவசாய பணிகளோடு, கொஞ்சம் அறிவியலும், நவீன தொழில்நுட்பமும் கலந்திருந்ததால், சுவாரசியமான முயற்சியாக அமைந்தது. மேலும் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில், இதுபோன்ற சைலேஜ் தீவனங்களை தயாரிக்கிறார்கள். அதனால், 2018-ம் ஆண்டு பஞ்சாப் விவசாயிகளின் எந்திர உதவிகளோடு, ஒரு சில அறிவியல் நண்பர்களின் வழிகாட்டுதலோடு, ஸ்டார்ட்-அப் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
அதிகம் பிரபலமில்லாததை முயன்றிருக்கிறீர்கள். எதிர்கொண்ட சவால்களை கூறுங்கள்?
பழக்கமில்லாத ஒன்றை பழகும்போது, பல சிரமங்களை எதிர்கொள்வது வழக்கம்தான். ஆரம்பத்தில் மக்காச்சோளத்தை நறுக்குவதில், அரைப்பதில், பதப்படுத்துவதில்... சிக்கல்கள் இருந்தன. அதற்காக, பிரத்யேக எந்திரங்களை கடனுக்கு வாங்கி, அதன் மூலம் தயாரித்தேன். எஞ்சியிருக்கும் சைலேஜ் தீவனத்தை பத்திரப்படுத்தி, தீவன தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில், அக்கம் பக்கத்து ஊர் விவசாயிகளுக்கு கொடுக்க ஆரம்பித்தேன். அது தொடர்கதையாகி போக, இப்போது நிறைய விவசாயிகள் சைலேஜ் தீவனத்தை முழுமையாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.
ஆடு-மாடு வளர்ச்சி, பால் உற்பத்தியில் வித்தியாசம் தெரியுமா?
நிச்சயமாகவே இருக்கும். மாமிச பயன்பாட்டிற்காக வளர்க்கப்படும் ஆடுகளுக்கு, அதன் உயிர் எடையில் 10:1 என்ற விகிதத்தில் பசுந்தீவனம் கொடுக்கும்போது, அதன் எடை 4 முதல் 5 கிலோ வரை அதிகரிக்கும். தாய் ஆடுகளுக்கு சைலேஜ் கொடுப்பதன் மூலம், அதன் பால் சுரப்பை அதிகரிக்க செய்ய முடியும். 2 முதல் 3 குட்டிகள் ஈன்றால் கூட, அவை அனைத்திற்கும் பால் கிடைக்கும்.
ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்ப்பது, மேய்ச்சல் முறையில் வளர்ப்பது, பரண் முறையில் வளர்ப்பது என எப்படி வளர்த்தாலும், பசுந்தீவனம் கொடுக்கலாம். என்னுடைய பண்ணையில், இவ்விரு தீவனங்களை பயன்படுத்தி இருப்பதால்தான், இந்த கருத்தை கூறுகிறேன்.
பால் பண்ணை தொழிலுக்கு, சைலேஜ் சிறந்ததா?
ஆம்...! கலப்பு தீவனம் இல்லாமல் சைலேஜ் மட்டும் பயன்படுத்தும்போது பெரியளவிலான வித்தியாசத்தை உணரலாம். மாடுகளின் வளர்ச்சியும், பால் கரக்கும் திறனும் 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும். மேலும் அதிகச்சத்து நிறைந்த பாலும் கிடைக்கும். கன்று ஈனும் திறனும் அதிகரிக்கும். எங்கள் ஊரை சுற்றி இருக்கும் பல மாட்டு பண்ணைகளில், செலவு நிறைந்த கலப்பு தீவனங்களுக்கு மாற்றாக செலவு குறைந்த சைலேஜ் வகைகளையே பயன்படுத்துகின்றனர். கணிசமான லாபம் பார்க்கிறார்கள்.
இயல்பான வைக்கோலுக்கும், சைலேஜ் தீவனத்திற்கும் என்ன வித்தியாசம்?
வைக்கோலில் இல்லாத கச்சா புரதம் சைலேஜில் உண்டு. மேலும் வைக்கோலில் கிடைப்பதை விட அதிகளவிலான ஆற்றல் சைலேஜில் கிடைக்கும். இதுபோக, மழை-வெள்ளம் காலங்களில் சைலேஜ் பாதிப்படையாது. வைக்கோலின் பாதி விலையிலேயே சைலேஜ் வாங்கி விடலாம். அதனால் ஆடு-மாடு பண்ணைகளின் தீவன செலவு குறைந்து, பராமரிப்பு பணிகளுக்கான நேரமும் குறைந்து, மற்ற பணிகளில் கவனம் செலுத்த முடியும்.
தமிழகத்திற்கு ஏற்றதா இது?
தமிழகத்தில் மக்காச்சோளம் அதிகமாக விளைகிறது. அதற்கு நல்ல விலை கிடைத்தாலும், கிடைக்காமல் போனாலும், வியாபாரிகள் வாங்கினாலும், வாங்காமல் போனாலும், அதை மாற்று வழியில் தீவனமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் ஆடு-மாடு பண்ணைகள் அதிகமாக இருக்கும் தமிழகத்தில், இது சிறப்பான மாற்றுவழி திட்டமாக இருக்கும்.
புதிதாக சைலேஜ் ஸ்டார்ட் அப் தொடங்க நினைக்கும் இளைஞர்கள் என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
என்னுடைய ஆரம்ப கால ஆராய்ச்சிகள் தொடங்கி, இப்போது வரைக்குமான தொழில்நுட்ப மேம்பாடுகளை பேஸ்புக் பக்கத்திலும், யூ-டியூப் தளத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதை பார்த்து நிறைய இளைஞர்கள், சைலேஜ் ஸ்டார்ட்-அப் தொழில் தொடங்கி இருக்கிறார்கள். ஒருசில விஷயங்களில் கவனமாக இருந்தால்போதும், இந்த முயற்சியில் வெற்றி பெறலாம். குறிப்பாக பேக்கிங் செய்யப்படும் சைலேஜ் பசுந்தீவனத்தின் ஈரப்பதம் 65 சதவிகிதம் இருக்க வேண்டும். தீவன கலவையில் கட்டாயமாக 350 கிராம் அளவில் மக்காச்சோள கதிர் இருக்க வேண்டும். மேலும் ஆடு-மாடுகள் எளிதாக சாப்பிடுவதற்கு ஏற்ப தீவன கலவை, 5 மி.மீ முதல் 8 மி.மீ அளவில் பக்குவமாக அரைக்கப்பட்டிருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, தீவன, பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், 1 வருடம் வரை கெட்டுப்போகாமல் இருக்கக்கூடிய தீவனம், வெகுவிரைவாகவே கெட்டுவிடும்.
சாதாரண தீவனத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்?
சைலேஜ், மக்காச்சோளத்தில் தயாரானது. சாதாரண பச்சைப்புல்லில் இருப்பதை விட, அதீத ஊட்டச்சத்து இதில் கிடைக்கும். அதேசமயம், உலர் தீவனம், பசுந்தீவனம், மக்காச் சோளம் என மூன்றுமே சரிவர கலந்திருப்பதால் ஆடு-மாடுகளுக்கு வேறு எதையும் கொடுக்க வேண்டியதில்லை. சைலேஜ் தீவனத்துடன் தண்ணீர் மட்டும் கொடுத்தாலே போதுமானது.