இந்திய கலாசாரத்தை கொண்டாடும் இசைக்குழு
|'பா... பா... பிளாக் ஷிப்', 'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' போன்ற மேற்கத்திய கலாசாரத்தை பறைசாற்றும் பாடல்களை கேட்டு வளர்ந்த நமக்கு, 'குட்டுக்கி' (kutuki) குழுவினர் உருவாக்கி இருக்கும் இந்திய கலாசார பாடல்கள் சற்று புதிதாகவே தோன்றுகின்றன. வழக்கமான ஆங்கில 'ரைம்ஸ்' பாடல்களுக்கு மாற்றாக, இந்திய கலாசார பெருமைகளை உள்ளடக்கிய 'ரைம்ஸ்' பாடல்களை குட்டுக்கி குழுவினர் உருவாக்கி உள்ளனர். சினேகா மற்றும் பரத் ஆகியோரின் புத்தாக்க முயற்சியில்தான், இந்த 'குட்டுக்கி' குழு புத்தம்புது இசை பாடல்களோடு ஒலிக்கிறது.
''நானும் பரத்தும், ஐ.டி. துறையில் பணியாற்றியவர்கள். எங்களது சிந்தனை வெவ்வேறானது என்றாலும், எங்களை ஒன்றிணைத்த புள்ளி, இசை. நான் நன்றாக பாட்டு பாடுவேன். பரத் கிட்டார் மற்றும் வயலின் கலைஞர். அதனால் எங்களது கூட்டணியில் பல இசை நிகழ்ச்சிகள் அரங்கேறின. ஒருசில ஆவணப்படங்களுக்கும் ஒருசேர இசை பணியாற்றினோம். எங்களது கூட்டணி வெற்றிபெற நாங்கள், 'குட்டுக்கி' குழு உருவாக்கம் பற்றி சிந்திக்க ஆரம்பித்தோம்'' என முன்கதை சொல்லும் சினேகா-பரத் காம்போ, குடும்ப வாழ்க்கையிலும், குட்டுக்கி இசை குழுவிலும் ஒன்றிணைந்து அசத்துகிறார்கள். பெங்களூருவை சேர்ந்த இவர்கள் நண்பர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துப்படியே, குழந்தைகளுக்கான இசை பாடல் உருவாக்க பணியில் ஈடுபட்டு, வெற்றியும் கண்டுள்ளனர்.
''இந்திய கலாசாரத்தில், இந்திய பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் குழந்தைகளுக்கான இசைப்பாடல்களை உருவாக்க ஆசைப்பட்டோம். அப்படி உருவானதுதான், 'குட்டுக்கி' இசை குழு. இந்தியாவின் நில அமைப்பு, குடும்ப உறவுகள், வீட்டின் வடிவமைப்பு, உணவு பழக்க வழக்கங்கள், அன்றாட வேலைகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தியும், அதையே பாடல் வரிகளாக மாற்றியும் இசைப்பாடல்களை உருவாக்கி இருக்கிறோம்'' என்றார், பரத்.