பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடாலின் கடைசி சீசனை ஆவணப்படம் எடுக்கும் நெட்பிளிக்ஸ்
|ரபேல் நடால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
மாட்ரிட்,
ஸ்பெயின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபேல் நடால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டேவிஸ் கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றார். கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.
மேலும், 63 டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நடால் படைத்துள்ளார். 38 வயதான ரபேல் நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் சேர்த்து மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் காயங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரபேல் நடால் பெரும்பாலான போட்டிகளை தவறவிட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மூன்றை தவற விட்ட அவர், பிரஞ்சு ஓபன் போட்டியில் மட்டுமே பங்கேற்றார். அதிலும் முதல் சுற்றை தாண்டவில்லை. பாரீஸ் ஒலிம்பிக்கிலும் 2-வது சுற்றோடு நடையை கட்டினார்.
இந்த நிலையில், ரபேல் நடாலின் 2024 சீசனின் அடிப்படையில் ஆவணப்படத் தொடரை நெட்பிலிக்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்லோஸ் அல்கராஸ் குறித்தும் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.