சர்வதேச பேட்மிண்டன்: லக்சயா சென், பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
|பி.வி. சிந்து, இரா ஷர்மாவை போராடி வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
லக்னோ,
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென் 21-14, 21-13 என்ற நேர்செட்டில் இஸ்ரேலின் டேனில் துபோவென்கோவை 35 நிமிடத்தில் விரட்டியடித்து காலிறுதிக்கு முன்னேறினார். லக்சயா சென் காலிறுதியில் சக நாட்டு வீரர் மிராபா லுவாங்கை சந்திக்கிறார்.
மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-19 என்ற நேர்செட்டில் ஹோக் ஜஸ்டினையும் (மலேசியா), பிரியன்ஷூ ரஜாவத் 21-15, 21-8 என்ற நேர்செட்டில் லீ டுக் பாத்தையும் (வியட்நாம்) தோற்கடித்து காலிறுதியை எட்டினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-10, 12-21, 21-15 என்ற செட் கணக்கில் 147-ம் நிலை வீராங்கனையான சக நாட்டை சேர்ந்த இரா ஷர்மாவை போராடி வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.