புரோ கபடி லீக்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் - விவரம்
|11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது.
புனே,
12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும், 3வது கட்ட லீக் ஆட்டங்கள் புனேவிலும் நடைபெற்றன.
கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் 6 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. அதன்படி புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
புள்ளிப்பட்டியலில் 3 முதல் 6 இடங்களை பிடித்த உ.பி.யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. புனேவில் நாளை நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் உ.பி.யோத்தாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.
இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். புள்ளிப்பட்டியலில் 7 முதல் 12 இடங்களை பிடித்த தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.