புரோ கபடி லீக்; பாட்னாவை வீழ்த்தி சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ்
|புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
புனே,
12 அணிகள் பங்கேற்ற 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இந்த கபடி திருவிழாவில் லீக், நாக்-அவுட் சுற்று, அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. தொடக்கம் முதலே இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 15-12 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தன. இறுதியில் ஆட்ட நேர முடிவில் 32-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.