பி.வி. சிந்துவின் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடக்கம்; திருமண தேதி அறிவிப்பு
|பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவின் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20-ந்தேதியே தொடங்கி விடும். 24-ந்தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
புதுடெல்லி,
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
இதுபற்றி சிந்துவின் தந்தை பி.வி. ரமணா செய்தியாளர்களிடம் கூறும்போது, இரு குடும்பத்தினரும் முன்பே நன்கு அறிமுகம் ஆனவர்கள்தான். ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே, அனைத்து விசயங்களும் முடிவாகின என்றார். இதன்படி, வருகிற 22-ந்தேதி உதய்ப்பூரில் சிந்துவின் திருமணம் நடைபெற உள்ளது.
ஜனவரியில் இருந்து சிந்துவுக்கு, விரைந்து செய்வதற்கென்று நிறைய பணிகள் காத்திருக்கின்றன. அதனால், இதுவே சாத்தியப்பட்ட ஒரே வழி என ரமணா கூறியுள்ளார். இரு குடும்பங்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்தோம். திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20-ந்தேதியே தொடங்கி விடும். 24-ந்தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.
சிந்து விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளார். ஏனெனில் அடுத்து வர கூடிய போட்டிகள் அவருக்கு முக்கியம் வாய்ந்தவை என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 5 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை சிந்து வென்றுள்ளார். அவற்றில் 2019-ம் ஆண்டில் அவர் பெற்ற தங்க பதக்கமும் அடங்கும். இவை தவிர, ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளார்.