மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன்: இந்தியாவின் லக்சயா சென் தோல்வி
|மலேசியாவில் நடந்து வரும் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து இந்தியாவின் லக்சயா சென் வெளியேறி உள்ளார்.
கோலாலம்பூர்,
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த முன்னணி பேட்மிண்டன் வீரரான, பாரீஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை சென்றவரான லக்சயா சென் பங்கேற்றார்.
அவர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 32 பேர்களுக்கான சுற்று போட்டியில் சீன தைபேவின் சீ யூ-ஜென் என்பவரை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில், 14-21, 7-21 என்ற செட் கணக்கில் சென் தோல்வியுற்றார்.
எனினும், இந்தியாவின் மற்றொரு வீரரான எச்.எஸ். பிரனாய் மற்றொரு போட்டியில் வெற்றி பெறும் சூழலில் உள்ளார். அவர், கனடாவின் பிரையன் யாங்கை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் பிரனாய் 21-12, 9-11 என்ற செட் கணக்கில் முன்னணியில் உள்ளார். ஸ்டேடியத்தில் மேற்கூரையில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டதில் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால், இந்த போட்டி இன்று தொடர்ந்து நடைபெற உள்ளது. முதல் செட்டை பிரனாய் கைப்பற்றி உள்ள சூழலில், 2-வது செட்டில் 11-9 என்ற புள்ளி கணக்கில் யாங் முன்னிலையில் உள்ளார். இந்த செட்டை கைப்பற்றினால், பிரனாய் வெற்றி பெறுவார்.