எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் - குகேஷ்
|உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று நேற்று சென்னை திரும்பிய குகேசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை,
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 7.5 - 6.5 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன் மூலம் சென்னையை சேர்ந்த 18 வயதான குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை குறைந்த வயதில் வென்ற வீரர் என்ற வரலாறு படைத்தார். அத்துடன் இந்த பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ் நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் குகேஷ் கூறுகையில்,
உலக சாம்பியனாக சென்னை திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் அளித்த அன்பும், ஆதரவும் நான் உலக சாம்பியன் பட்டம் வெல்ல நிறைய ஊக்கம் அளித்தது. இந்த வெற்றியை எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.