கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவுக்கு 3 பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு
|கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் சீனாவின் வாங் ஜெங் ஜிங்கை வீழ்த்தி இந்தியாவின் சதீஷ் குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
கவுகாத்தி,
அசாமின் கவுகாத்தி நகரில் இந்தியா சார்பில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 என்ற பேட்மிண்டன் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர் மற்றும் மகளிர் இரட்டையர் என 3 பிரிவுகளில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், சதீஷ் குமார் கருணாகரன், மகளிர் ஒற்றையர் பிரிவில் அன்மோல் கார்ப் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியன்களான அஸ்வின் பொன்னப்பா மற்றும் தனீஷா கிராஸ்டோ ஆகியோர் அரையிறுதி போட்டிகளில் திறம்பட விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.
இதில், ஆடவர் ஒற்றையர் போட்டியில் சதீஷ் குமார் திறமையாக விளையாடி சீனாவின் வாங் ஜெங் ஜிங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அன்மோல் கார்ப், மான்சி சிங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.
இதேபோன்று, மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வின் பொன்னப்பா மற்றும் தனீஷா கிராஸ்டோ இணை, சீனாவின் கெங் ஷு லியாங் மற்றும் வாங் டிங் கெ இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். அவர்கள் மற்றொரு சீன வீராங்கனைகளான லி ஹுவா ஜாவ் மற்றும் வாங் ஜி இணையை எதிர்த்து விளையாட உள்ளனர். இதனால், போட்டி தொடரின் 3 பிரிவுகளில் இந்தியாவுக்கு தலா ஒரு பதக்கம் கிடைப்பது நிச்சயம். இதுபோன்ற சர்வதேச அளவிலான நாடுகள் பங்கேற்கும் போட்டி தொடர்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் சாதிக்கும் வாய்ப்பு பிரகாசித்து உள்ளது.