கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியா சாம்பியன்
|கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில், இந்திய வீரர் சதீஷ் 21-17, 21-14 என்ற புள்ளி கணக்கில் ஜுவான் சென்னை வீழ்த்தி கோப்பையை வென்றார்.
கவுகாத்தி,
அசாமின் கவுகாத்தி நகரில் இந்தியா சார்பில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 என்ற பேட்மிண்டன் போட்டி தொடர் நடத்தப்பட்டது. இதில், சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியியில், இந்தியாவின் சதீஷ் குமார் கருணாகரன், சீனாவின் வாங் ஜெங் ஜிங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், இன்று நடந்த இறுதி போட்டியில், சீனாவின் ஜூ ஜுவான் சென்னை எதிர்த்து சதீஷ் விளையாடினார். இந்த போட்டியில், இந்திய வீரர் சதீஷ் 21-17, 21-14 என்ற புள்ளி கணக்கில் ஜுவான் சென்னை வீழ்த்தி கோப்பையை வென்றார்.
கடந்த ஆண்டு நடந்த ஒடிசா மாஸ்டர்ஸ் சூப்பர் 100 போட்டியில், பட்டம் வென்றுள்ள சதீஷ், இந்த போட்டியிலும் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். இதேபோன்று, மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீனாவின் காய் யான் யானிடம் 21-14, 13-21, 19-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்டார்.