டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
|டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து, 18-21, 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
கோபன்ஹேகன்,
டென்மார்க் நாட்டின் ஒடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் சீனாவின் ஹேன் யுயே, இன்று நடந்த காலிறுதிக்கு முந்தின ஆட்டம் ஒன்றில் விளையாடினர்.
இந்த போட்டியின் தொடக்கத்தில் சீன வீராங்கனை 18-21 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று முதல் செட்டை கைப்பற்றினார். எனினும், அடுத்தடுத்து இரு செட்களில் திறமையாக விளையாடி வெற்றி பெற்று, தரவரிசையில் 18-வது இடம் வகிக்கும் சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்த போட்டி, மொத்தம் 1 மணிநேரம் மற்றும் 3 நிமிடங்கள் வரை நடந்தது. இதில் 18-21, 21-12, 21-16 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். அடுத்து, உலக தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங் அல்லது மியா பிளிச்பெல்ட் ஆகியோரில் ஒருவருக்கு எதிராக நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில் சிந்து விளையாடுவார்.