செஸ் சாம்பியன்ஷிப்: ஜீன்ஸ் அணிந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மேக்னஸ் கார்ல்சன்
|ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க்,
நார்வே நாட்டு செஸ் கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து போட்டியில் பங்கேற்க வந்ததற்காக உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேக்னஸ் கார்ல்சன் 2ஆம் நாள் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்தார்.
இதையடுத்து போட்டியின் ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சனுக்கு போட்டியின் நடுவர் 200 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தார். மேலும், கார்ல்சனை ஜீன்ஸ் உடையை மாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதனை கார்ல்சன் ஏற்க மறுத்துள்ளார்.
இதன் காரணமாக போட்டியின் 9வது சுற்றிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக பிடே (FIDE) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கார்ல்சன், பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து வெளியேறினார்.
இது தொடர்பாக நார்வே ஒலிபரப்பாளர் உடன் பேசிய கார்ல்சன், "நான் பிடே (FIDE) இல் மிகவும் சோர்வாக இருக்கிறேன், அதனால் எனக்கு இது எதுவும் வேண்டாம். அவர்களுடன் எனக்கு எதுவும் வேண்டாம்" என கூறியுள்ளார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) இந்த முடிவை விளக்கி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, "இந்த முடிவு பாரபட்சமின்றி எடுக்கப்பட்டது. இது அனைத்து வீரர்களுக்கும் சமமாக பொருந்தும். விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், ஜீன்ஸ் உடையை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட போதும், அவர் அக்கோரிக்கையை ஏற்க மறுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மற்றொரு பங்கேற்பாளரான இயன் நெபோம்னியாச்சியும் விளையாட்டுக் காலணிகளை அணிந்து ஆடைக் குறியீட்டை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு இணங்கிய அவர் அதனை மாற்றிக் கொண்டு போட்டியில் தொடர்ந்து விளையாடினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.