குத்து சண்டை போட்டி : மைக் டைசனை வீழ்த்திய ஜாக் பாலுக்கு ரூ.338 கோடி பரிசுத்தொகை
|குத்து சண்டை போட்டியில் மைக் டைசனை வீழ்த்தி டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜேக் பால் வெற்றி பெற்றார்.
டெக்ஸாஸ்,
அமெரிக்காவில் 1980-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிரபல குத்து சண்டை வீரராக இருந்தவர் மைக் டைசன் (வயது 58). இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். இந்தநிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குத்துசண்டையில் மைக் டைசன் இன்று களம் இறங்கினார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 27 வயதான குத்துசண்டை வீரர் ஜேக் பாலை எதிர்த்து இன்று போட்டியிட்டார். 8 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மைக் டைசனை வீழ்த்தி ஜேக் பால் வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் ஜேக் பால் 278 முறை மைக் டைசனை தாக்க முயன்றார். அதில் 78 தாக்குதல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. மறுபுறம் மைக் டைசன் 97 முறை மட்டுமே ஜேக் பாலை தாக்க முயன்றார். அதில் 12 தாக்குதல்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.இரண்டு நடுவர்களில் ஒருவர் 80 - 72 எனவும், மற்றொருவர் 79 - 73 எனவும் ஜேக் பாலுக்கு சாதகமாக புள்ளிகளை வழங்கினார்கள்.
இந்த நிலையில், மைக் டைசனை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜாக் பாலுக்கு ரூ.338 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது . தோல்வியடைந்த டைசனுக்கு ரூ.169 கோடி வழங்கப்படுகிறது