பளுதூக்குதலில் மீண்டும் பதக்கம் வெல்வாரா மீராபாய் சானு..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
|பாரீஸ் ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு இன்று களம் இறங்குகிறார்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, பளுதூக்குதலில் இன்று நடக்கும் 49 கிலோ எடைபிரிவில் களம் காணுகிறார். அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
கடந்த 2 ஆண்டுகளாக காயத்தால் அவதிப்பட்ட மீராபாய் சானு 2023-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். என்றாலும் சவால்களை சமாளித்து இந்த ஒலிம்பிக்கிலும் முத்திரை பதிப்பாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். அவர் பங்கேற்கும் போட்டி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
நாளை 30 வது பிறந்த நாள் கொண்டாடும் மீராபாய் சானு, இன்று நடைபெறும் போட்டியில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி பதக்கம் வென்றால் அவருக்கு அது சிறந்த பரிசாக அமையும்.