பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி; இந்தியா - அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா
|இந்தியா தரப்பில் ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என சமனில் நீடித்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் லூகாஸ் ஆர்டினெஸ் (22வது நிமிடம்) கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இதையடுத்து 2வது பாதி ஆட்டம் முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. தொடர்ந்து 3வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 1-0 என அர்ஜென்டினா தொடர்ந்து முன்னிலை வகித்தது.
இதையடுத்து 4வது பாதி (கடைசி பாதி) ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தனர். இறுதியில் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் (59வது நிமிடம்) ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் அயர்லாந்தை நாளை எதிர்கொள்கிறது.