பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
|பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 தூரத்திற்கு வீசி 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
முன்னதாக நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றிருந்தார். இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், தற்போது முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.