< Back
ஒலிம்பிக் 2024
தங்கம் வென்று சாதனை படைப்பாரா நீரஜ் சோப்ரா..? இறுதிப்போட்டியில் இன்று களம் இறங்குகிறார்
ஒலிம்பிக் 2024

தங்கம் வென்று சாதனை படைப்பாரா நீரஜ் சோப்ரா..? இறுதிப்போட்டியில் இன்று களம் இறங்குகிறார்

தினத்தந்தி
|
8 Aug 2024 7:46 AM IST

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இன்று இறுதிசுற்றில் களம் இறங்குகிறார்.

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 11.55 மணிக்கு அரங்கேறுகிறது. தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்ட ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இரண்டு முறை உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), ஜூலியன் வெப்பர் (ஜெர்மனி), காமன்வெல்த் சாம்பியன் அர்ஷத் நதீம் (பாகிஸ்தான்), டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான ஜாக்குப் வாட்லெஜ் (செக்குடியரசு) உள்பட 12 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

இறுதிப்போட்டியை பொறுத்தவரை முதலில் எல்லோருக்கும் தலா 3 வாய்ப்பு வழங்கப்படும். இதன் முடிவில் கடைசி 4 இடங்களில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதன் பிறகு மீதமுள்ள 8 வீரர்களுக்கு மேலும் 3 முறை ஈட்டி எறிய வாய்ப்பு கொடுக்கப்படும். அதாவது 8 வீரர்கள் மட்டும் மொத்தம் 6 முறை இலக்கை நோக்கி எறிந்து இருப்பார்கள். இவற்றில் யார் அதிக தூரம் வீசுகிறார்களோ அவர்கள் மகுடம் சூடுவார்கள்.

26 வயதான நீரஜ் சோப்ரா தகுதி சுற்றில் 89.34 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்தார். இந்த சீசனில் அவர் வீசிய அதிகபட்ச தூரம் இது தான். இதே தொலைவுக்கு அவர் வீசினாலே ஏறக்குறைய தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கிவிடலாம். மீண்டும் அவர் மகுடம் சூடினால், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இரண்டு தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திர சாதனையை நிகழ்த்துவார். ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இதற்கு முன்பு 4 வீரர்கள் மட்டுமே அடுத்தடுத்து இரு தங்கத்தை வென்று இருக்கிறார்கள். அந்த வரிசையில் அவரும் இணைவார்.

2020-ம் ஆண்டு நடைப்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இவர் எறிந்த ஈட்டின் தூரம் 87.58 மீட்டர் என்பதாகும். அந்த வகையில் இந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்