பாரீஸ் ஒலிம்பிக்: சரித்திர சாதனை படைத்த இந்திய வீராங்கனை மனு பாக்கர்
|நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
3-வது நாளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தனிநபர் 10 மீட்டர் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார்.
5-வது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவுக்கான வெண்கல பதக்க போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை, தென் கொரியாவின் ஜின் ஓ யே - வோன்ஹோ லீ ஜோடியை 16-10 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
இது நடப்பு தொடரில் இந்தியாவின் 2-வது பதக்கமாக பதிவாகியுள்ளது. இந்த 2 வெண்கல பதக்கங்களையும் மனு பாக்கர் வென்றுள்ளார்.
இதன்மூலம் ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திர சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.