பாரீஸ் ஒலிம்பிக்: ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வி
|பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது.
பாரீஸ்,
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 60வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியா , ஜெர்மனி மோதின.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தில் 18வது மற்றும் 27வது நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர். பின்னர் ஆட்டத்தில் 36வது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.
இதையடுத்து, ஆட்டத்தின் இறுதியில் 54வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோல் அடித்தார். இதனால், ஜெர்மனி 3 கோல்கள் என முன்னிலை பெற்றது. இந்திய வீரர்கள் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தனர். ஆனால், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இதன் மூலம் ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு ஜெர்மனி முன்னேறியது. அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியா நாளை நடைபெற உள்ள வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ள உள்ளது.