பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆக்கி அணிக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து
|இந்திய ஆக்கி அணிக்கு பாலிவுட் நட்சத்திரங்களான டாப்சி, அனில் கபூர் மற்றும் இம்ரான் ஹஷ்மி ஆகியோர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்..
புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆக்கி ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் வழக்கமான ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது.
சூட் அவுட்டில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. இதனை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய ஆக்கி அணிக்கு பாலிவுட் நட்சத்திரங்களான டாப்சி, அனில் கபூர் மற்றும் இம்ரான் ஹஷ்மி ஆகியோர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இம்ரான் ஹஷ்மி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய ஆக்கி அணியின் புகைப்படத்தை பதிவிட்டு, "வாவ் வாழ்த்துக்கள் இந்திய அணி" என்று வாழ்த்தியுள்ளார்.
அனில் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றி பெற்ற அணியின் படத்தை பகிர்ந்து, "இந்திய அணிக்கு வெற்றியுடன் முடிவடைந்த திரில்லிங்கான ஒரு போட்டி!!! அரையிறுதி போட்டிகள் அற்புதமாக இருக்கும்! வாழ்த்துகள். தகுதியான வெற்றி!!" என்று பதிவிட்டுள்ளார்.
பாரீஸ் மைதானத்தில் இருந்து போட்டியை நேரலையில் பார்த்த டாப்சி, அணியின் செயல்திறன் மற்றும் வெற்றியின் பல காட்சிகளை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்டார்.