காயத்தால் அவதி: நீரஜ் சோப்ரா தாயகம் திரும்புவதில் தாமதம்
|காயத்தால் அவதிக்குள்ளான நீரஜ் சோப்ரா, பாரீசில் இருந்து ஜெர்மனிக்கு செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் தொடர்ச்சியாக 2 பதக்கங்கள் (2020ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற முதல் இந்தியரானார். இந்நிலையில் தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா, ஜெர்மனி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீரஜ் சோப்ரா இடுப்பு பகுதி காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார். இதனால் பல போட்டிகளை தவறவிட்டுள்ளார். காயப்பிரச்சினையை சரிசெய்ய ஆபரேஷன் தான் தீர்வு என்று ஏற்கனவே டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் காயத்தில் இருந்து மீள்வதற்காக ஆபரேஷன் செய்து கொள்வது தொடர்பாக நீரஜ் சோப்ரா பாரீசில் இருந்து ஜெர்மனிக்கு செல்கிறார். அங்கு தங்கியிருந்து பிரபல மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்குப்பின் அடுத்து வரும் போட்டிகளில் அவர் பங்கேற்பது குறித்து முடிவு செய்வார் என தெரிகிறது.