"பகவத்கீதையே எனது வெற்றிக்கு காரணம்.." - வெற்றி குறித்து மனம் திறந்த மனு பாக்கர்
|பகவத்கீதையே தனது வெற்றிக்கு காரணம் என ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது குறித்து மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கின் 2வது நாளான இன்று பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனு பாக்கர் (வயது 22) பங்கேற்றார். பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் மனு பாக்கர், 221.7 புள்ளிகள் பெற்று 3ம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அதேபோல் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் தான் பதக்கம் வெல்ல பகவத் கீதை காரணமாக இருந்துள்ளதாக வெண்கலம் வென்ற மனு பாக்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியாவுக்கு நீண்ட காலமாகக் கிடைக்க வேண்டிய பதக்கம் இது. நான் அதற்கான ஒரு கருவியாக மட்டுமே இருந்தேன் என்றே சொல்ல வேண்டும். இந்தியா இன்னும் அதிகமான பதக்கங்களைப் பெற தகுதியானது. இந்த முறை அதிக பதக்கங்களை வெல்ல முடியும் என நம்புகிறோம். தனிப்பட்ட முறையில் என்னால் இது நம்பவே முடியவில்லை.
நான் கடைசி ஷாட் வரை நம்பிக்கையைக் கைவிடவில்லை. தொடர்ந்து முயன்றேன். இந்த முறை வெண்கல பதக்கம் தான் கிடைத்தது. அடுத்த முறை தங்கம் வெல்வேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்.. நான் பகவத் கீதையை எப்போதும் படிப்பேன். அது எனது மனதிலேயே இருந்துவிட்டது. நீ எதைச் செய்ய வேண்டுமா அதை மட்டும் செய்.. என்ற பகவத் கீதை வரி தான் எனக்குள் ஓடிக் கொண்டு இருந்தது.
உங்களால் செய்ய முடிந்ததைச் செய்யுங்கள்.. மற்றதை விட்டுவிடுங்கள். விதியை உங்களால் மாற்றவே முடியாது.. இதுதான் எனது மனதில் ஓடியது. நீங்கள் கர்மாவில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் என்ன கிடைக்கும் என்பதை யோசிக்கக் கூடாது. அதுவே எனது மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதில் இருந்து மீண்டு வரத்தாமதம் ஆனது. ஆனால், போனவை போகட்டும்.. அது கடந்த காலம்.. இனி நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவோம் என்று முடிவு செய்தேன். மேலும், இந்த பதக்கம் என்பது அணியின் கூட்டு முயற்சிதான். நான் வெறும் கருவி மட்டுமே" என்று மனு பாக்கர் கூறினார்.