< Back
ஒலிம்பிக் 2024
நீரஜ் சோப்ராவுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்தேன் - பாக். வீரரின் தாயார் நெகிழ்ச்சி
ஒலிம்பிக் 2024

'நீரஜ் சோப்ராவுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்தேன்' - பாக். வீரரின் தாயார் நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
9 Aug 2024 8:22 PM IST

நீரஜ் சோப்ராவுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்ததாக பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் தாயார் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வியப்பூட்டும் வகையில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அதோடு அவர் தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதையடுத்து அர்ஷத் நதீம் மற்றும் நீரஜ் சோப்ராவுக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "நீரஜ் வெள்ளி பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கப்பதக்கம் வென்ற அந்த வீரரும் (அர்ஷத் நதீம்) எனது குழந்தைதான். ஒலிம்பிக் செல்லும் அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள்" என்று கூறினார்.

இதே போல், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் தாயார் ராசியா பர்வீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீரஜ் சோப்ரா எனது மகனைப் போன்றவர். இருவரும் சகோதரர்களைப் போன்றவர்கள். நீரஜ் சோப்ராவுக்கும் சேர்த்து நான் பிரார்த்தனை செய்தேன். அவர் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும்" என்றார்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் தாய்மார்களும், தங்கள் மகனுடன் போட்டியிட்ட வீரரை தங்கள் மகனைப் போல் பார்க்கிறோம் என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்