'சாம்பியன்களின் சாம்பியன் வினேஷ் போகத்' - பிரதமர் மோடி புகழாரம்
|100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோகியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பதக்கத்தை பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்.
தற்போதைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. என் வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு என்பது எனக்கு தெரியும். இளம் தலைமுறையினருக்கு வினேஷ் போகத் உந்துசக்தியாக இருக்கிறார். வலுவாக திரும்பி வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.