வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
|வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாரீஸ்,
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தஇறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் உடல் எடை கூடியதாக கூறி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், இனி என்னிடம் போராட சக்தியில்லை எனவும் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். . இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார். இந்த நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. மேலும் .வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கு விசாரணை இந்திய நேரப்படி நேற்று மாலை நடந்தது.
விசாரணை தொடங்கியபோது வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.இதையடுத்து வழக்கு தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பாரீஸ் நேரப்படி நாளை மாலை 6 மணிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.