2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடந்தால் நன்றாக இருக்கும் - நீரஜ் சோப்ரா
|இந்தியாவின் நீரஜ் சோப்ரா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வியப்பூட்டும் வகையில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அதோடு அவர் தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ரா தனது அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் வீசினார். இதனால் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துடன் 2-வது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், 2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடந்தால் நன்றாக இருக்கும் என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடந்தால் நன்றாக இருக்கும் .இது இந்திய விளையாட்டுக்கு மிகவும் நல்லதாக அமையும். எங்கள் ஆட்டத்தை நம் மக்கள் நேரலையில் பார்ப்பது நன்றாக இருக்கிறது. எங்கள் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே சீக்கிரம் எழுந்து தாமதமாக தூங்குகிறார்கள். இது இந்திய விளையாட்டு மாறியதற்கான அறிகுறிகளில் ஒன்று.என தெரிவித்தார்.