மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.
மஸ்கட்,
9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் சீனா (4 வெற்றியுடன் 12 புள்ளி) முதலிடமும், இந்தியா (3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் ஜப்பான் (12 புள்ளி) முதலிடமும், தென் கொரியா (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
இதில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி சார்பில் மும்தாஜ் கான், சாக்ஷி ராணா மற்றும் திபீகா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஜப்பான் அணி சார்பில் நிகோ ஒரு கோல் அடித்தார்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சீனா - தென் கொரியா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும்.