பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்
|இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.
ராஜ்கிர்,
6 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்தது. இதில் நேற்று மாலை அரங்கேறிய இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் அணியுமான இந்தியா, தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவை சந்தித்தது. இந்த ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நகர்ந்தது.
31-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு 5-வது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. இதனை பயன்படுத்தி முன்கள வீராங்கனை தீபிகா கோலடித்தார். நடப்பு தொடரில் அவர் அடித்த 11-வது கோல் இதுவாகும். 42-வது நிமிடத்தில் இந்திய அணி தனது முன்னிலையை அதிகரிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்த அரிய பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பில் தீபிகா அடித்த ஷாட்டை சீன கோல் கீப்பர் லி டிங் தடுத்து விட்டார். இதே போல் இன்னொரு பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய வீராங்கனை சுஷிலா சானு அடித்த பந்தையும் லி டிங் தடுத்து அசத்தினார்.
பதில் கோல் திருப்ப சீன அணியினர் கடும் நெருக்கடி அளித்தாலும், கடைசி வரை கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சீன அணியை லீக் ஆட்டத்திலும் இந்தியா (3-0) வென்று இருந்தது நினைவுகூரத்தக்கது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா சொந்தமாக்குவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2016, 2023-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடி இருந்தது. இதன் மூலம் அதிக முறை இந்த கோப்பையை வென்று இருந்த தென்கொரியாவின் சாதனையை (3 தடவை) சமன் செய்தது. இந்திய வீராங்கனைகள் லால்ரெம்சியாமி ஆட்டநாயகி விருதையும், தீபிகா தொடர்நாயகி விருதையும் பெற்றனர்.
முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் அணி 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பையுடன், ரூ.8.43 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த சீனாவுக்கு ரூ.5.90 லட்சமும், 3-வது இடம் பெற்ற ஜப்பான் அணிக்கு ரூ.4.21 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டன.