தேசிய சீனியர் ஆக்கி போட்டி: முதல் நாளில் கர்நாடகா, மத்திய பிரதேச அணிகள் வெற்றி
|31 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடங்கியது.
சென்னை,
தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில், 14-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், கடந்த முறை 3-வது இடம் பிடித்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, சண்டிகார், உத்தரகாண்ட், மணிப்பூர், பீகார், டெல்லி, கேரளா, ராஜஸ்தான் உள்பட 31 அணிகள் கலந்து கொள்கின்றன. பல்வேறு அணிகளில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்த அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
தொடக்க நாளான இன்று நடைபெற்ற ஆட்டங்களில் மத்திய பிரதேச அணி - அந்தமான் நிகோபாரையும் ( பிரிவு சி), கர்நாடகா அணி - உத்தரகாண்டையும் (பிரிவு டி), உத்தர பிரதேச அணி - கேரளாவையும் (பிரிவு எப்) மற்றும் மணிப்பூர் அணி - பீகாரையும் (பிரிவு எச்) வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.