ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா - சீனா இன்று பலப்பரீட்சை
|3-வது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தான் - தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
ஹூலுன்பியர் ,
6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில் சீனா, பாகிஸ்தானை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சீனா 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சீனாவுடன் மோதுகிறது. ஏற்கனவே லீக்கில் சீனாவை 3-0 கோல் கணக்கில் வீழ்த்திய உத்வேகத்துடன் இந்தியா களமிறங்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை என்பது கூடுதல் அம்சமாகும்.
முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான்- தென் கொரியா அணிகள் மோதுகின்றன.