இந்த சாதனை எனது வாழ்க்கையில் தனித்துவமானது - ரொனால்டோ
|கால்பந்து போட்டிகளில் தனது 900-வது கோலை சமீபத்தில் ரொனால்டோ அடித்தார்.
லிஸ்பன்,
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் தனது 900-வது கோலை அடித்தார். அவர் கிளப் போட்டிகளில் 769 கோலும், சர்வதேச போட்டிகளில் 131 கோலும் அடித்திருக்கிறார்.
இதன் மூலம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த சாதனை குறித்து அவர் கூறுகையில், 'இது (900 கோல்) எனக்கு முக்கியமானது. நான், இந்த மைல்கல்லை நீண்ட நாட்களாக அடைய விரும்பினேன். இந்த எண்ணிக்கையை அடைவேன் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் நான் தொடர்ந்து விளையாடும்போது, அது இயல்பாக நடந்துவிடும். எனது வாழ்க்கையின் பெரிய மைல்கல் என்பதால் இது எனக்கு உணர்ச்சி பூர்வமான தருணம். இது மற்ற சாதனைகளை போன்று தெரியலாம். ஆனால் எனக்கும், என்னை சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமே இதற்காக ஒவ்வொரு நாளும் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன் என்பது தெரியும். 900 கோல்கள் அடிக்க உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல தகுதியுடன் இருக்க வேண்டும். இந்த சாதனை எனது கால்பந்து வாழ்க்கையில் தனித்துவமானதாக இருக்கும்' என்றார்.