ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு
|11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கொச்சி,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - பெங்களூரு எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டம் கொச்சியில் நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதன் காரணமாக முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட பெங்களூரு அணியினர் மேலும் 2 கோல் அடித்து அசத்தினர்.
இறுதியில் இந்த ஆட்டத்தை 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கைப்பற்றி 5வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. தோல்வி கண்ட கேரளா புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.