ஐ.எஸ்.எல்.; சென்னையின் எப்.சி தலைமை பயிற்சியாளர் ஓவென் கோய்லேயின் பதவிக்காலம் நீட்டிப்பு
|சென்னையின் எப். சி தலைமை பயிற்சியாளர் ஓவென் கோய்லேயின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - எப்.சி.கோவா அணிகள் மோதின. சென்னையில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதன் முடிவில் சென்னை அணி தற்போது வரை 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 டிரா, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
சென்னையின் எப்.சி அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்காட்லாந்தை சேர்ந்த ஓவென் கோய்ல் (வயது 58) செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்றைய போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் இடைவெளியில் சென்னை அணி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, சென்னையின் எப்.சி அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஓவென் கோய்லேயின் பதவிக்காலம் 2026ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.