ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
|ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.
கெல்சென்கிர்சென்,
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்று (ரவுண்ட் ஆப் 16) நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று கெல்சென்கிர்செனில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - சுலோவாக்கியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் சுலோவாக்கியா அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தன. ஆனால் 90வது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
இறுதியில் இந்த ஆட்டத்தில் சுலோவாக்கியா வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் (கூடுதல் நேரம்) இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தியது.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. வரும் 6ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சுவிட்சர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.