கேரளாவில் அர்ஜென்டினா பங்கேற்கும் சர்வதேச கால்பந்து போட்டி - மெஸ்சி விளையாடுகிறார்
|கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி அடுத்த ஆண்டு கேரளா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளது. கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் மெஸ்சியுடன் கூடிய அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் மேற்பார்வையில் இந்த போட்டி நடத்தப்படும் என்றும், இந்த உயர்தர போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளும் மாநில வணிகர்களால் வழங்கப்படும் என்றும், மெஸ்சி கலந்து கொள்ளும் சர்வதேச போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது என்றும் விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மெஸ்சி கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியாவில் விளையாடினார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா அணி வெனிசுலாவை எதிர்கொண்டது. இந்த சர்வதேச நட்பு ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.