< Back
கிரிக்கெட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

Image: AFP 

கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

தினத்தந்தி
|
8 Dec 2024 11:59 AM IST

60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 87.3 ஓவர்களில் 337 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா முகமது சிராஜ் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 128 ரன்கள் அடித்திருந்தது.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்டின் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 2-வது இன்னிங்சில் 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா வெற்றி பெற வெறும் 19 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இந்த வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது . 60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தில உள்ளது. 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில உள்ளது

மேலும் செய்திகள்