பெண்கள் டி20 உலகக்கோப்பை: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது நியூசிலாந்து
|32 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
துபாய்,
9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்களும், புரூக் மேரி ஹாலிடே 38 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
அந்த அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய டாஸ்மின் பிரிட்ஸ் 17 ரன்களில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஓரளவு தாக்குப் பிடித்து 33 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். இறுதியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.