பெண்கள் டி20 உலகக்கோப்பை: ஹர்மன்பிரீத் போராட்டம் வீண்... இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா
|டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
சார்ஜா,
9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.இந்த நிலையில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் தகிலா மெக்ராத் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனே 2 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஜார்ஜியா வராஹம் டக் அவுட் ஆனார் . பின்னர் கிரேஸ் ஹாரிஸ் , தஹிலா மெக்ராத் இருவரும் சிறப்பாக விளையாடினர் . கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களும், தஹிலா மெக்ராத் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெரி 32 ரன்கள் எடுத்தார் . இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது .
தொடர்ந்து 152 ரன்கள் இலக்குடன் இந்தியா விளையாடியது. ஸ்மிர்தி மந்தனா 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஷபாலி வர்மா 20 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்து வந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்று விளையாடி அரைசதமடித்தார். வெற்றிக்கு அருகில் கொண்டுவந்தும், அவரால் அணியை வெற்றிபெறச்செய்ய முடியவில்லை.
முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி தரப்பில் ஷோபி, அனபல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.