மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; 2வது இந்திய வீராங்கனையாக மாபெரும் சாதனை படைத்த மந்தனா
|அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
ராஜ்கோட்,
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 92 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 34.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் பிரதிகா ராவல் 89 ரன், தேஜல் ஹசப்னிஸ் 53 ரன், ஸ்மிருதி மந்தனா 41 ரன் எடுத்தனர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 41 ரன் எடுத்ததன் மூலம் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது இந்திய வீராங்கனையாக மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று 41 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது இந்திய வீராங்கனை, ஒட்டுமொத்தத்தில் 15-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
அத்துடன் மந்தனா அதிவேகமாக 4 ஆயிரம் ரன் மைல் கல்லை கடந்த இந்திய வீராங்கனை என்ற சிறப்பை முன்னாள் கேப்டன் மிதாலி ராஜிடம் (112 போட்டிகளில்) இருந்து தட்டிப்பறித்தார். மந்தனா இதுவரை 95 ஒருநாள் போட்டியில் ஆடி 9 சதம், 29 அரைசதத்துடன் 4,001 ரன்கள் எடுத்துள்ளார்.