மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து
|இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டாமி பியூமண்ட் 34 ரன்கள் எடுத்தார்.
டர்பன்,
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 135 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் சோலி ட்ரையான் 45 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சார்லோட் டீன் 4 விக்கெட்டும், சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 24 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டாமி பியூமண்ட் 34 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்னரி டெர்க்சன் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.